Sunday, 21 April 2013

மண்ணாங்கட்டியும் சொரிமுத்துவும் - சிறுகதை


எஸ்.சுகுமார், 266/C858

 

      தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் பார்த்து வேதாளம் எள்ளி நகையாடியது, ``விக்கிரமாதித்தா, நான் சொல்லும் கதையை கவனமாகக் கேள். எனது கேள்விக்குப் பதில் தெரிந்தும் கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும்.'' என்று கூறி கதையைக் கூற ஆரம்பித்தது.!

      விளங்காவூர் எனும் ஊரில் மண்ணாங்கட்டி என்றொரு வணிகன் வாழ்ந்துவந்தான், எந்த நேரமும் தின்பதைப் பற்றியும், பணத்தை எப்படிச் சேர்ப்பது என்பதைப் பற்றியும் தவிர, வேறு எதைப்பற்றியும் இவன் சிந்தித்ததே கிடையாது. இவனது தந்தை, இவனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து விடவேண்டுமென்று படாத பாடுபட்டார். இவனது மண்டையில் படிப்பு ஏறவில்லை. ஆனால் இவனது தங்கை வடிவுக்கரசி படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள். இதனிடையே புத்திசாலித்தனமும், அழகும் நிறைந்த வடிவுக்கரசி மீது பக்கத்துத் தெருவிலுள்ள குணசேகரன் காதல் கொண்டான். இவனைப் பற்றி அவளும் அறிந்திருந்ததால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனதால், அன்பால் இணைந்தனர். இவர்களது காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது! இதனிடையே வடிவுக்கரசி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். இதுதான் தக்க தருணம் என்று தனது காதலை வீட்டில் வெளிப்படுத்தினாள் வடிவுக்கரசி! அம்மா ஆதரவாக இருந்தாலும் அண்ணனும், அப்பாவும் இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்! இதற்கு மேல் தாமதித்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்த குணசேகரனும், வடிவுக்கரசியும் வீட்டை விட்டும் ஊரை விட்டும் வெளியேறி திருமணமும் செய்து கொண்டார்கள்

      நாட்கள் கடந்தது ஒரு நாள் திடீரென வடிவுக்கரசியின் அண்ணன் மண்ணாங்கட்டி இவர்களது வீட்டுக்கு வந்தான், குடும்பத்தைப் பிரிந்து குடும்ப உறவுகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த வடிவுக்கரசிக்கு தலைகால் புரியவில்லை! அம்மா எப்படி இருக்காங்க? அப்பா நல்லா இருக்காங்களா? என்று பாசத்தைப் பொழிந்தாள். எல்லோரும் நல்லா இருக்காங்க எல்லோரும் உன் நினைவாகவே இருக்காங்க. உங்களை கூட்டி வரச்சொன்னாங்க, முறையா கல்யாணம் செஞ்சி, சீர் செய்து அனுப்பணும்னு சொன்னாங்க என்று கூறி மச்சான் முதல்ல நீங்க வாங்க என்கூட என்று நயவஞ்சகமாகக் கூட்டிச் சென்று குணசேகரனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டான் மண்ணாங்கட்டி.

      விக்கிரமாதித்தா இன்னும் கேள், இதே போன்று மறுவூர் என்ற

சிற்றூரில் ஏழ்மையான குடும்பச் சூழலில் கருப்பசாமி வெள்ளையம்மாள் தம்பதிக்கு இராதா என்ற அழகான பெண் இருந்தாள். அவர்களது தலைமுறையில் மேற்படிப்பு படித்த முதல் பெண்ணாக முன்னேறி நல்ல நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்! இவள் போகும் போதும், வரும் போதும், இவளைப் பார்த்து இவளது அழகில் மயங்கிய சொறிமுத்து என்ற இளைஞன், அவளைப் பின் தொடர்ந்து தன்னைக் காதலிக்க வற்புறுத்தினான். அந்த இளம்பெண் அவனைக் காதலிக்க மறுத்துவிட்டாள்.

      ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக இருவரது மனதிலும் முகிழ்க்க வேண்டிய மென்மையான உணர்வல்லவா காதல்?

      அப்படியில்லாமல் நான் விரும்பிவிட்டேன். அதனால் நீ எனக்குத்தான் சொந்தம். நீ வேண்டாம் என்று மறுத்தால் மற்றொருவனோடு உன்னை வாழ விடமாட்டேன். எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற அராஜக சிந்தனையோடு அவள் பஸ்சுக்குக் காத்திருக்கும் வேளையில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவளது முகத்தில் ஊற்றிவிட்டு ஓடிவிட்டான் சொறிமுத்து. முகம் சிதைந்த நிலையில் இராதா சில நாட்களிலேயே இறந்து போனாள்!

      முதல் கதையில் அவள் விரும்பியபடி காதலித்தாள், மணமும் முடித்தாள்! ஆனால் சொந்த சகோதரனே அவளை வாழவிடவில்லை!

      இரண்டாவது கதையில் அவள் விரும்பாததால் காதலிக்க மறுத்தாள்! அவளை விரும்பியவன் அவளை வாழவிடவில்லை!

      அப்படியென்றால் பெண் அவள் விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியவில்லையே ஏன்? இதற்குத் தீர்வு என்ன?

விக்கிரமாதித்தன் சற்று யோசித்துவிட்டு....

மனிதகுல வரலாற்றின் ஆரம்ப நிலையில் குடும்பத்தையும், குழுக்களாக அலைந்து திரிந்தபோது அந்தக் குழுவுக்கும் பெண்தான் தலைமை தாங்கினாள், திறம்பட நிர்வகித்தாள். காலம் மாற மாற நிலையாக ஒரே இடத்தில் வாழும் நிலை ஏற்பட்ட போதுதான் சொத்துடைமைச் சமூகமாக மாறியது, தனியுடைமையும் தலைதூக்கியது. கூடவே பெண்ணடிமைத்தனமும் வளர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அதன் விளைவுதான் மண்ணாங்கட்டியும், சொறிமுத்துவும்

உண்மையான அறிவியல் கல்வியை மக்களுக்கு அளிக்கும் போது ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழும் பொன்னுலகம் மலரும்.

      விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா