Sunday, 21 April 2013

இந்த ஞானம் வந்தால் பின் வேறெது வேண்டும்?


V.கோவிந்தசாமி, 352/K302, Mechanical Maintenance

 

      புனிதமான செயல்களுக்குள் புதைந்து கிடப்பதே புகழ் என்கிறார் சாக்ரடீஸ். அடுத்தவர் நலனை முன்னிறுத்தி தம்மை மெழுகாய் உருக்கி, தியாக வாழ்வு வாழ்ந்தோரெல்லாம், இறவாப் புகழுடையோரே.

      சிலருக்கு வரவேண்டிய ஞானம் வந்துவிட்டால், அவர்களைக் கட்டிப் போட யாராலும் முடியாது. ஒரு ஞானத் தூண்டல் அது. அது தூண்டப்பட்டுவிட்டால், அவர்களது உறுதி வைரத்தின் பலத்தையும் சாய்த்துவிடும். அவர்கள், இந்தச் சமூகத்தை எப்படியாவது புரட்டிப் போட வேண்டும் என்று துடிப்பார்கள். இந்தத் துடிப்பே ஏழை எளியோரின் துயர் துடைக்கும் மாமருந்தாய் அமைகிறது.

      மனிதனின் துன்பம் கண்டு உருகுகிறான் சித்தார்த்தன். அரண்மனை துறந்தான். துன்பம் செயற்கையானது, கடவுள் தந்ததல்ல எனக் கண்டு கொண்டான். அந்த ஞானத்தைப் பற்றிய பின் அரசனாக வேண்டியவன் புத்தனாக மாறினான். வெற்றி எட்டு திக்கும் கொட்டு முரசே என்று துவங்கும் பாரதியின் முரசுப் பாடலைப் படித்தால், வேறெதையும் படிக்கும் மனம் வராது. பாருக்குள்ளே நல்ல நாடு, பாரத நாடு என்று புகழும் பாரதி, ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி என்கிறார். நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ என இந்தியாவின் பொருளாதாரம் தகர்ந்த நிலை கண்டு கொதித்தார் பாரதி.

      தனது நலனுக்காக மட்டும் பாடுபடுபவன் ஞானியாக இருக்கலாம், கவிஞனாக இருக்கலாம், ஆனால் மனிதனாக இருக்க முடியாது என்று எழுதிய காரல் மார்க்ஸ், மனிதம் என்பதை கண்டுணர்ந்து சொன்னவர். மனித வாழ்வின் உந்து சக்தியாகத் திகழ்வது வர்க்கப் போராட்டமே என்றார். உழைக்கும் உழைப்பாளியின் சக்தி இரண்டாகப் பிரிகிறது. கொடுக்கப்பட்ட கூலி, கொடுக்கப்படாத கூலி. இந்தக் கொடுக்கப்படாத கூலியே ஆதிக்க சக்திகளின் சொத்தாக, மூலதனமாக மாறுகிறது. இந்த மூலதனத்தின் உரிமையாளர்கள் தொழிலாளர்கள். அவர்கள் ஒருபோதும் வறுமையில் வாடக் கூடாது என்றார்.

      ஏழ்மையை அனுபவித்த பெர்னாட்ஷா, ``நீங்கள் தேய்ந்த பொருளாய் குப்பையாய் எறியப்படுவதற்கு முன், உங்கள் ஜீவன் மகத்தான காரியத்திற்கு பயன்பட வேண்டும்.'' என்றார்.

      ``வறுமையை ஒழிக்க ஒரு வழி, எல்லாவற்றையும் சமுதாய உடைமையாக்கி, சமமாகப் பங்கிட்டுவிட்டால், உலகில் தலைவிரித்தாடும் அத்தனை இன்னல்களும் மறைந்து மக்கள் இன்புற்று இருப்பார்கள்'' என்றார் பெர்னாட்ஷா.

      ஏற்றத்தாழ்வு இல்லாத சமமான சமூகம் உருவாகும் நாள் வரும். இது சோதிடமல்ல. மார்க்ஸ் எனும் சமூக விஞ்ஞானியின் சரியான கணிப்பு.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா