செல்போன் தயாரிக்கும் நோக்கியா
இந்தியா லிமிடெட் தொழிற்சாலையில் 4.3.13 அன்று ஊதிய உயர்விற்கான முத்தரப்பு 12(3) ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் தொழிற்சாலையில் சுமார் 5000 நிரந்தரத்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் 3500 பேர் இளம்பெண்கள். இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 13லிருந்து
மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலாமாண்டு ஊதியப்பட்டியல்
வகையிலேயே ரூ.3800ம்,
இரண்டாம் ஆண்டு ரூ.3500ம், மூன்றாமாண்டு
ரூ.3500ம் என
ரூ.10 ஆயிரத்து
800 உயர்வு கிட்டிவிடும்.
புதிய கம்பெனிகளில் குறிப்பாக
பன்னாட்டு நிறுவனங்களில் விலைவாசிப் புள்ளியோடு இணைந்த பஞ்சப்படியை ஏற்பதில்லை என்பதை
ஒரு கொள்கையாகவே பின்பற்றுகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் மாறும் பஞ்சப்படி கொள்கையை
நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஒரு தனித்துவமான சாதனையாகும். மாறும் பஞ்சப்படி
மூலம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் சராசரியாக ரூ.800 மேற்கொண்டு கிடைத்துவிடும்.
அடிப்படைச் சம்பளம் உயரும்
போது ஊக்கத்தொகையில் உயர்வு எற்படும். ஆண்டிற்கு மாதம் 1000 என்ற வீதத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயர்வு வரும். மூன்றாண்டு இறுதியில் இந்த வகை
உயர்வு மாதத்திற்கு ரூ.3000 அக இருக்கும்.
ஒருநாள் கூடுதலாக லீவு வழங்கப் பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சர்வீசிற்கு 1 வார
சம்பளமும், 10 ஆண்டு
சர்வீசிற்கு 14 நாட்கள்
சம்பளமும் சர்வீஸ் வெகுமதியாக கிடைக்கும். 10 ஆண்டு சர்வீசிற்கு மேற்கொண்டு ரூ.6000 மதிப்புள்ள நினைவுப் பொருள் கிடைக்கும்.
ஆண்டுதோறும் இலவசமாக முழு
மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். விபத்து
நிவாரணத்திற்கு குழு காப்பீட்டுத்திட்டம் எற்பாடு செய்யப்படும். குறைந்தது 2 ஆண்டுச் சம்பளம் கிடைக்குமாறு பாலிசியை நிர்வாகம் செலுத்தும். விபத்திலோ வேறுவகையிலோ
இறப்போரின் வாரிசுக்கு நிர்வாகம் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கும். இது எந்தத் தனியார் கம்பெனியிலும் இல்லாதது. இது தவிர
ஒவ்வொரு தொழிலாளியும் ரூ.50\-ம் நிர்வாகம்
அதற்கு இணையாக ரூ.50ம் போட்டு
வருகிற தொகையும் (சுமார்
5 லட்சம்) அந்தக்குடும்பத்திற்கு வழங்கப்படும்.
இஎஸ்ஐலிருந்து
வெளியே வரும் தொழிலாளியின் குடும்பத்திற்கு (அம்மா, அப்பா
உட்பட 6 பேருக்கு)
ரூ.2 லட்சம்
வரை சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டை நிர்வாகமே செய்யும். நோக்கியா வளாகத்தில் ஒரு சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட
வசதி கொண்ட மருத்துவமனையை 2014க்குள்
நிர்வாகம் உருவாக்கும். கம்பெனியில் ஒரு கூட்டுறவு
பண்டக சாலை நிறுவ நிர்வாகம் எல்லா உதவிகளையும் வழங்கும். அதற்காக ரூ.5 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம்
மூன்றாமாண்டு இறுதியில் ஒவ்வொரு தொழிலாளியும் மொத்தத்தில் ரூ.15 ஆயிரம் அளவிற்கு உயர்வாகப் பெறுவார்கள். இப்போது மாதம் ரூ.7000 அளவிற்கு சம்பளம் பெற்று வருபவர்கள் மூன்றாமாண்டு இறுதியில் மாதம் ரூ.22 அயிரம் பெறுவார்கள். எலக்ட்ரானிக் கம்பெனிகளில்
இது வரை இப்படிப்பட்ட உயர்வு பெறப்பட்டதில்லை. இந்த ஒப்பந்தம் தொழிற்சங்க இயக்க வரலாற்றில்
ஒரு மைல் கல். இந்த ஒப்பந்தம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு,
இனி அடிப்படையாக அமையும்.
சிஐடியு தலைவர்கள் தொழிலுக்கு
குந்தகம் விளைவிப்பவர்கள், போராட்டத்திற்காகவே
போராட்டம் நடத்துபவர்கள், வன்முறையாளர்கள்,
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையற்றவர்கள் என்றெல்லாம் செய்யப்படுகிற
பிரச்சாரங்களுக்கு இந்த ஒப்பந்தம் சரியான பதிலடியாகும். இந்தியா முழுவதிலும்,
சென்னை சுற்றுப்புறங்களிலும் கடந்த 50 ஆண்டுகளாக செங்கொடி இயக்கம் எண்ணற்ற ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ள வரலாற்றை புது
நிறுவனங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
நியாயமான, பொறுப்புணர்வுள்ள, நேர்மையான தொழிலாளி வர்க்க நலன் சார்ந்த செயல்பாடு என்கிற
சிஐடியுவின் பாரம்பரியத்திற்கு நோக்கியா ஒப்பந்தம் குறிப்பிடத்தகுந்த அண்மைச்சான்று.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா