Sunday, 21 April 2013

நினைத்துப் பார்க்கிறேன்


க.ராமையன், 221/36038, செல்: 9445680897

 

      அசோக் லேலண்டின் அன்பு நெஞ்சங்களே... வணக்கம்! கேண்டீன் தொழிலாளியாக அடியெடுத்து வைத்து, 33 வருடங்கள் பணியாற்றி, தற்போது மனநிறைவோடு பணி நிறைவு பெறுகையில் தங்களிடம் சில கருத்துக்களை மனம் விட்டுப் பேச விரும்புகிறேன்.

      எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த நம்மை நமது தொழிலகம் சாதி, மதம், மொழி கடந்த தொழிலாளியாக அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது. ஆகவேதான் நாம் வாழ்வதும், வீழ்வதும் தொழிலாளர் நலனுக்காகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

      ஒன்றிரண்டு வருடங்களில் மூத்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிநிறைவு பெற உள்ள தருணத்தில், இளம் தொழிலாளர்களுக்கு ஒன்றைச் சொல்­­லிக் கொள்ள விரும்புகிறேன்.

      இளம் தொழிலாளர்களே... நமது சங்கம்தான் நமக்குப் பாதுகாப்பு! நீங்கள் துடிப்போடும், உற்சாகத்தோடும், சுயநலத்தைப் புறம் தள்ளி தொழிலாளி வர்க்க நலன்தான் நமது லட்சியம் என்ற முடிவோடு செயல்பட முன்வர வேண்டும். வலுவான சங்கம்தான் தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும். எனவே, சங்கத்தை வலுப்படுத்த வேண்டியது உங்கள் கடமை! அதுமட்டுமல்ல, நிரந்தரத் தொழிலாளியின் நலன்களைப் பாதுகாப்பதோடு, காண்டிராக்ட் தொழிலாளர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் வாழ வழி வகுப்பதும் உங்களின் கடமை! அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      நமது தொழிலாளர்களிடம் இணைந்து பழகிய இந்த 33 வருடங்களில் அவர்களின் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது. இசையில், மருத்துவத்தில், சட்டத்துறையில், கலை, இலக்கியம், கவிதை, ஓவியம் என எல்லாத் துறைகளிலும் நம் தொழிலாளர்கள் வல்லுநர்களாக வலம் வருவதை நினைக்கும் போது பெருமிதமாக இருக்கிறது. உரிமைக்குரல் இதழில் எழுதும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்கு ஒப்பாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. உரிமைக்குரல் மென்மேலும் சிறப்புற தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

      உங்களிடம் பிரியா விடை பெறும் இந்நேரத்தில் ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் வசந்தம் வீசியது. சூறைக்காற்று அடித்தது, ஆழிப் பேரலை தாக்கியது, ஆனால் நான் வீழ்ந்து விடாமல், துன்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் கலங்கரை விளக்கமாய் இருந்து என்னைக் கரை சேர்த்தது பொதுவுடைமை இயக்கம் தான் என்பதை என்னால் மறக்க முடியாது. அசோக் லேலண்டில் பணிநிறைவு பெற்றாலும் எனது சமூகப்பணி தொடரும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தொழிலாளி-விவசாயி நலன் காத்திட அவர்களின் உரிமைக்கான போரில் எனது பங்கும் இருக்கும்.

      இனிமேல் ஓய்வு இல்லை... இயக்கம்தான் இறுதி எல்லை.... என்ற முடிவோடு உங்களின் நீங்காத நினைவுகளைச் சுமந்து செல்கிறேன்! தோழர்களே! நினைவுகள் அழிவதில்லை....!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா