Tuesday, 15 October 2013

சோதனைக்கூடமா… நமது நாடு?

K.ராஜேஷ் கண்ணன், 217/38180

      குழந்தைகளுக்கான ஷாம்பு, சோப்பு தொடங்கி, அழகு சாதனப் பொருட்கள் வரை நச்சுக்களால் நிரம்பி இருக்கின்றன. குழந்தைகளுக்கான ஷாம்புவில் சோடியம் லாரல் சல்பேட் மற்றும் சோடியம் ஈத்தேல் சல்பேட் என்கிற நச்சு வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன. சோடியம் லாரல் சல்பேட் இல்லாத ஷாம்பு இந்தியாவில் மிக மிக அரிது. இது குழந்தைகளை பெரிதும் பாதிக்கும்.


      பேபி ஆயில் போட்டு குழந்தைகளுக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் சருமம் பளபளவென மின்னும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான எண்ணெயில் பிசுபிசுப்பை அகற்றி, அடர்ந்த எண்ணெயில் இருந்து வடிகட்டிய லேசாக்கப்பட்ட எண்ணெயை எடுக்க ஹெக்சேன் ஆர்கானிக் உப்புகளை சேர்க்கிறார்கள். இது குழந்தையின் மெல்லிய சருமத்தில் ஊடுறுவி தோல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

      குழந்தைகளுக்கான பிரத்யேக நகப்பூச்சுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அதில் தோல் புற்று நோய்க் காரணிகளான ``காரீயம்'' அளவுக்கு அதிகமாக கலந்துள்ளது. சாப்பிடும்போது நகப்பூச்சில் இருக்கும் காரீயம் உணவில் எளிதாகக் கலந்து விடும். இதனால் உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். கண் இமையின் மீது பூசப்படும் அழகூட்டியில், பாலி சைக்ளிக் ஹைட்ரோ கார்பன் எனப்படும் வேதிப் பொருள் புற்றுநோயை உருவாக்கவல்லது. உதட்டுச் சிவப்புக்குப் போடப்படும் சாயங்களில் மார்பு புற்றுநோய்க் காரணிகள் இருக்கின்றன. இவை ஹார்மோன்களையும் பாதிக்கச் செய்து, பெண் குழந்தைகளை விரைவில் பூப்படையச் செய்கின்றன. மேற்கண்ட பொருட்கள் நம் குழந்தைகளை மட்டும் கொல்வது இல்லை; தாயையும் சேர்த்துக் கொல்கின்றன.

      ஆம்! பூமி தானே நம் அனைவருக்கும் தாய்! ஷாம்பு, சோப்பு, முகப்பூச்சு, சருமப்பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், பேபி ஆயில் இவற்றைப் பயன்படுத்தி குளிக்கும்போது நீரில் வழிந்து, நிலத்தில் கரைந்து மண்ணை மலடு ஆக்குகிறதே!

      இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுங்கள்! சீயக்காய், அரப்பு, செம்பருத்தி, பெருநெல்லி போன்றவற்றை விட சிறந்த ஷாம்பு உலகில் எங்கு இருக்கிறது? நம் பருப்பு வகைகளையும், பழ வகைகளையும் விடவா அழகூட்டிகள் அழகை நமக்களிக்கும்? இயற்கையான அழகை அளிக்கும் செக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இருக்க பேபி ஆயில் நமக்கு எதற்கு?

      உலகமயம் குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை என்ற நிஜம் நம்மைச் சுடுகிறது. விழிப்பாய் இருப்போம்! நம் குழந்தைகளை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா