Tuesday, 15 October 2013

காதலா… இது காதலா…

S.சுகுமார், 266/C858

            சில்லென்ற கடற்காற்று மேனியைத் தழுவிச் சென்ற போதும் உடலெல்லாம் தகித்துக் கொண்டிருந்தது ரேவதிக்கு. வெகு நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரகு இன்னும் ஏன் வரவில்லை? மென்மையான அவளது மனது பாறையாகக் கனக்க, கலக்கமுற்று ரகு வருகிறானா என்று ரேவதியின் கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டே இருந்தது. தூரத்தில் ரகு வருவதைப் பார்த்து மகிழ்ந்தாலும், அவனைப் பார்க்காதது போல தலையைக் கவிழ்த்து ஏதோ யோசனையில் இருப்பதைப் போல் நடித்தாள் ரேவதி.


            ``என்ன கோபமா ரேவதி?...'' ``இருக்காதா பின்ன... எவ்வளவு நேரந்தான் ஒரு பெண் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கிட்டிருக்கிறது? போறவங்க, வர்றவங்க எல்லாம் எரிச்சிடுற மாதிரி பாத்துக்கிட்டே போறாங்க'' என்றாள் ரேவதி.

            ``எங்க ஆபிசில் கொஞ்சம் வேலை, அத முடிச்சிட்டு தான் போகணும்னு ஆயிடுச்சி. அதான் லேட். கோவிச்சுக்காத'' என்ற ரகுவிடம், ``நீ லேட்டா வந்ததுக்காக மட்டும் நான் வருத்தமா இல்ல, நம்ம காதல் நிறைவேறாம நாம பிரிஞ்சுடுவோமோன்னு தான் எனக்கு ஒரே பயமா இருக்கு ரகு''

            ``ஏன் நம்ம காதல் உங்க வீடுவரை  எட்டிடுச்சா என்ன?'' ``இல்ல, எனக்கு வரன் பார்க்கணும்னு பேசிக்கிட்டிருக்காங்க, என்கிட்டயும் ஜாடை மாடையாய் சொன்னாங்க.''

            ``அதுக்கு நீ என்ன சொன்ன ரேவதி?'' ``எனக்கு இப்போ கல்யாணம் வேணாம், நான் இன்னும் படிக்கணும்னு படிப்பு மேல சாக்கு போட்டுட்டேன். இதே மாதிரி எத்தனை நாளைக்கு தான் சொல்லி தப்பிக்க முடியும். எனக்கு பயமா இருக்குது ரகு.'' என்று அவனது தோளின் மீது சாய்ந்தாள் ரேவதி.

            ``இதுல பயப்பட என்ன இருக்குது. இன்னொரு முறை இது போல உங்க வீட்டுல சொன்னாங்கன்னா, நான் ஒரு நல்ல அழகான, படிச்ச, நல்ல பயனை... அதாவது ஐயாவை விரும்புறேன். அவன் பேரு ரகு என்று சொல்லிட வேண்டியதுதானே'' என்று சட்டைக் காலரை தூக்கிவிட்டுக் கொண்டான் ரகு.

            ``நீ ஈசியா சொல்லிட்டே, ஆம்பிளையான நீயே உங்க வீட்டுல சொல்றதுக்குப் பயப்படற, எனக்கு உபதேசம் செய்றியா. உபதேசம் பண்றது ரொம்ப ஈசி'' என்று கூறிக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ``நேரமாயிடுச்சி வீட்டுல தேடுவாங்க'' என்ற ரேவதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ``நீ பயப்படாத ரேவதி, நீயும் வீட்டுல சொல்லிடு, நானும் எங்க வீட்டுல சொல்லி, உங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்க ஏற்பாடு செய்கிறேன்.'' என்று கூறி விடைபெற்றான் ரகு.

            மறுநாள் ரேவதி ஆபீசுக்கு செல்லும்போதே போன் அழைப்பு வந்தது. ரகுவிடம் இருந்துதான். ``மகிழ்ச்சியான செய்தி'' என்ற ரகுவை இடைமறித்து, ``நான் மகிழ்ச்சியான செய்தியை முதலில் சொல்றேன். எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க!'' ``இதையேதான் நானும் சொல்ல வந்தேன். வரும் ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வர்றதா இருக்கோம்.'' என்று கூறி போனை வைத்தான் ரகு.

            ``அம்மா அவங்க வந்துட்டாங்க'', வந்தவர்களை அன்போடு  வரவேற்று உட்கார வைத்து உபசரித்தனர். சிறிது நேர அமைதிக்குப் பிறகு ரகுவின் அம்மா வீட்டை நோட்டம் விட்டவாறே பேச்சை ஆரம்பித்தாள், ``என் பையனும், உங்க பொண்ணும் நமக்கு வேலை வெக்காம, ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பிட்டாங்க... ம்... என்ன செய்றது? மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொன்னீங்கன்னா...'' என்று இழுத்தாள். ``என்ன செய்யணும்னு சொல்லுங்க...'' இது ரேவதியின் அப்பா. ``எங்க சாதியில சாஸ்திரம், சம்பிரதாயம் பார்ப்பதோட எல்லாமே கொஞ்சம் கிராண்டா செய்யணும்னு எதிர்பார்ப்பாங்க. நகை நட்டு ஒரு 50 சவரன் போட்டுடுங்க, மெயின் இடத்துல பெரிய சத்திரமா பாத்து பிக்ஸ் பண்ணிடுங்க, மத்தபடி உங்களுக்குத் தெரியாததா... வழக்கப்படி என்னென்ன செய்யணுமோ அதை நல்லா செஞ்சிடுங்க... எல்லாம் நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கிறதுக்குத்தானே நாம பாடுபடுறோம்.''

            இவ்வளவையும் கேட்டுக் கொண்டு பவ்யமாக அமைதியாக இருந்தான் ரகு. ரேவதியின் குடும்ப நிலை, ரகுவின் குடும்பத்துக்கு தெரியாது என்றாலும், ரகுவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் எதுவும் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தான் ரகு. ரகுவின் குடும்பத்தாரிடம் தனது அப்பா கூனிக்குறுகி செய்வதறியாது, கைப்பிசைந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டு, தனது குடும்ப சூழ்நிலை அனைத்தும் அறிந்த ரகுவும் வாய்மூடி மௌனியாக அவனது அம்மாவின் கோரிக்கைகளுக்கு பின்னால் மரக்கட்டையைப் போல் இருந்ததைப் பார்த்ததும் ஆவேசம் வந்தவளாக, ``காதலிக்கும்போது சாதி, அந்தஸ்து, வசதி பார்க்கவில்லை, கல்யாணம் என்று வரும்போது மட்டும் அந்த காதலுக்கும் விலை கொடுக்க வேண்டுமா? நீங்கள் கேட்ட அனைத்தும் கொடுத்தால்தான் எங்களது காதல் ஈடேறும் என்றால் அந்தக் காதலே எனக்கு வேண்டாம், அந்தக் காதலை வெறுக்கிறேன்.'' என்று பொரிந்து தள்ளினாள் ரேவதி. ``ரேவதி'' என்று அருகில் வந்தான் ரகு. ``குட் பை. நீங்கள் போகலாம்.'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்தினாள் ரேவதி.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா