Tuesday, 15 October 2013

தலையங்கம்

            இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் மனநிலையைத் தெரியப்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு நடந்துள்ள இத்தேர்தலில் 67.52% மக்கள் வாக்களித்தார்கள். அதில் தமிழ் தேசியக் கூட்டணி 80% வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது. மக்களின் இந்தப் பங்கேற்பு, அவர்கள் தங்கள் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வு உருவாக விரும்புவதைக் காட்டுகிறது. அவர்களது தீர்ப்பு, தங்கள் நலன்களுக்காக நிற்கக்கூடியது தமிழ் தேசிய கூட்டணிதான்; ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி அல்ல என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறது.


            முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க புதிய மாகாண ஆட்சி அமைய உள்ளது. தற்போது இலங்கை அரசுக்கு உள்ள பொறுப்பு தலையாயது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, கூட்டணி கட்சிகளுக்கிடையேயும், தனது கட்சிக்குள்ளேயும் உள்ள எதிர்ப்புகளைச் சமாளித்து 13வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவது; முழுமையான தன்னாட்சி உரிமையோடு மாகாண அரசு அமைய ஒத்துழைப்பது; தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும், சிங்கள மக்களிடையே இணக்கத்தையும் வளர்க்க உறுதியோடு செயல்படுவது ஆகியன இன்றைய அவசியத் தேவை. இந்திய அரசும் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும்.

            முனைப்போடும், விசாலப்பார்வையோடும் பங்காற்றுகிற கடமை இலங்கையின் ஜனநாயக சக்திகளுக்கு முன்னெப்போதையும் விட கூடுதலாக இருக்கிறது. இத்தகைய சூழல்கள் நிலைபெற இலங்கையில் இந்தத் தேர்தல் முடிவு ஒரு நல்ல தொடக்கப்புள்ளியாக அமையட்டும் என்பதே உலகத்தின் விருப்பம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா