கி.சுரேஷ், 270/38313, சேசிஸ்
அசெம்பிளி
நாட்டின் ஆதாரமான இயற்கை வளங்கள், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் இழப்பை
ஏற்படுத்துகிறது அரசு. மணல், சுரங்கம், இயற்கை எரிவாயு என இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய இயற்கை வளங்களை கொள்ளை
போகவிட்டு மானிய வெட்டு, ரேஷன் முறை ரத்து என
மத்திய அரசு மக்களின் மீது சுமை ஏற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
மத்திய ஆட்சியாளர்கள் 1998ஆம் ஆண்டு மக்கள் விரோதமான, பொறுப்பற்ற, ஒரு விபரீத முடிவை எடுத்தனர். மணல், சுரங்கம், இயற்கை எரிவாயு ஆகியவற்றை தனியாரும் கையாளலாம் என்றும், அந்நிய முதலீடு வரலாம் என்றும் நாடாளுமன்றத்திலும் விவாதிக்காமல் எடுத்த முடிவால், இன்று இயற்கை வளம் தனியார் முதலாளிகளால் கொள்ளை அடிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம்
வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
வைகுண்ட ராஜன் போன்ற மணல் மாஃபியாக்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற கடற்கரை மாவட்டங்களில் அரசு நிர்ணயித்த அளவையும்
மீறி இயற்கை மணலையும், தாது மணலையும் கொள்ளை அடித்து ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் சம்பாதித்து அரசுக்கு ரூ.200 கோடி வழங்கி, ஏமாற்றி வருகின்றன.
இதைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகளை மிரட்டியும், லஞ்சம் வழங்கியும், கொலை செய்தலும் நடக்கிறது. தாது மணலில் இல்மனைட், ரூட்டைல், சீர்கான், மோனோசைட் போன்ற தாதுக்களைப்
பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் மோனோசைட் போன்றவை அணுசக்தி
மூலப் பொருள் கொண்டவை. இவை நாளை நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயமும் உள்ளது.
நிலக்கரி வெட்டி எடுப்பதில் தனியார் மயம் செய்த சீர்குலைவு, இன்று அதன் முக்கிய கோப்புகள் காணாமல் போனது (காணாமல் ஆக்கியது) வரை, அதுவும் பிரதமர் அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் காலகட்டத்தில்
நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரியை வெட்டி எடுக்க ஏலம் எடுத்த 139 நிறுவனங்களில் 4 மட்டுமே அரசின் ஓராண்டு
வெட்டி எடுக்கக்கூடிய நிலக்கரியின் நிர்ணய அளவை எட்டியுள்ளது. இதில் 89 நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் என்று உச்சநீதிமன்றம் நிலக்கரி வெட்டி எடுக்கும்
உரிமையை ரத்து செய்தது. மீதமுள்ள நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த அளவை வெட்டி எடுக்காமல், வெட்டி எடுத்த நிலக்கரியை உள்நாட்டின் பயன்பாட்டுக்குத் தராமல் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்தன. விளைவு, இந்தியாவில் நிலக்கரி
பற்றாக்குறை ஏற்பட்டு, நிலக்கரியை இறக்குமதி செய்தது அரசு. இதனால் அன்னிய செலாவணி குறைந்து
ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் தனியார் மயம்
என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதே போல் மீத்தேன், ஷெல் கேஸ் போன்ற இயற்கை
எரிவாயு கிடைக்கும் கிருஷ்ணா - கோதாவரி பள்ளத்தாக்கை
(ஓ.எ. - 6) ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு
கொள்ளை அடிக்க விடப்பட்டது. இந்நிறுவனம் இன்று வரை அரசு நிர்ணயம் செய்த அளவை வழங்காமல்
காலம் தாழ்த்தி வந்ததும் அல்லாமல் கிடைத்ததை ஏற்றுமதி செய்து லாபம் பார்த்தது. அதுவும்
அரசுக்கு வழங்கும் விலையையும் அதிகரித்துள்ளது. இந்திய அரசு கச்சா எண்ணெய், நிலக்கரி, மற்றும் தங்கம் இறக்குமதியை அதிகப்படுத்தியதன் விளைவு, இறக்குமதி அதிகரித்தது. மூலப் பொருள் ஏற்றுமதி குறைந்து நடப்பு கணக்கு பற்றாக்குறை
(ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள விகிதம்) ஏற்பட்டது.
ஈரானிடம் இருந்து நமக்கு இரண்டு அருமையான திட்டங்கள் கிடைத்தன.
ஒன்று இயற்கை எரிவாயு குறைந்த விலைக்கு வழங்குதல், மற்றொன்று நமது ரூபாய்
மதிப்பில் கச்சா எண்ணெய் வழங்குதல் (கச்சா எண்ணெய் விலை
உலகம் முழுவதும் டாலரில் நிர்ணயம் செய்யப்படுகிறது). அதுவும் இந்தியா பணமாகக்
கொடுக்காமல் இந்தியாவில் உள்ள பொருள்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்று சொன்னது ஈரான்.
இதனால் நமது கச்சா எண்ணெய் பிரச்சனை தீரும். விலை குறையும். மேலும் நமது உள்நாட்டு
பொருள்களும் விற்பனை ஆகி ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த அருமையான திட்டத்தை அமெரிக்காவின்
நிர்ப்பந்தம் காரணமாக இந்தியா கைவிட்டது. நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையால், இயற்கை வளம் கொள்ளை போகிறது. நல்ல திட்டங்கள் கைவிடப்படுகின்றன. விலைவாசி உயர்ந்து
நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு அடைகிறது. இதற்குத் தீர்வு மத்திய அரசின் தலைமை மாற்று
அல்ல. இந்த மக்கள் விரோத கொள்கைக்கு மாற்று கொள்கை ஒன்றே வழி. அதை வழி கோலிட புதிய
மாற்றை உருவாக்க நாம் ஓரணியில் அணி திரள்வோம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா