Thursday, 26 December 2013

அந்த ஓலைக்குடிசையில்…

க.ராமையன்

      காட்டையும், மேட்டையும் வெட்டிச் சமமாக்கி, விளை நிலங்களாய், கம்மாய்கள், ஏரிகள், குளங்கள் என உருவாக்கி, சேற்றிலும், சகதியிலும், வெயிலிலும், குளிரிலும், உருண்டு, புரண்டு காலம் காலமாய் வறுமையின் கொடுமைகளைச் சந்தித்து, ஆலயத்திற்குள் நுழையத் தடை, டீ குடிக்கத் தனிக் குவளை, காலில் செருப்பணிய முடியாமல், தோளில் துண்டு போட முடியாமல், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல், வாழ்வதும், சாவதும் ஊர்களின் ஓரத்தில்தான். இறந்தாலும் தனி சுடுகாடு, பண்ணையார்களின் அடக்குமுறைக்கு அடிபணியாத தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை வாயில் சாணிப்பால் ஊற்றி, சவுக்கால் அடித்து, உதைத்து கொடுமைகள் புரிந்த நிலவுடமையாளர்களுக்கு எதிராகத் தலைநிமிரச் செய்த இயக்கம் செங்கொடி இயக்கம்!

      உரிமைக்காக, கூலி உயர்வுக்காக, போராட எழுந்த தாழ்த்தப்பட்ட ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்களின் மீது நிலவுடமையாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறை வெறித் தாக்குதலின் உச்சகட்டம்தான் வெண்மணி படுகொலை. அன்று ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு போலீஸ் துணையுடன், நிலவுடமையாளர்களின் கூலிப்படைகள் நுழைந்து, கூலி உயர்வு கேட்டு போராடியவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் தப்பிக்க நினைத்து 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 44 பேர் ஒரு ஓலை குடிசைக்குள் ஒதுங்கினார்கள். இதைப் பார்த்த கூலிப் படைகள், அந்த வீட்டைக் கொளுத்திவிட்டு, அவர்கள் வெளியே வராதபடி கதவைத் தாளிட்டு வெறிக்கூச்சலோடு குதூகலித்தார்கள். ஆனால் அந்த குடிசையில் மரண ஓலத்தோடு அந்த 44 பேரும் எரிந்து சாம்பலானார்கள்.
      1\2 படி நெல் கூலி உயர்வு வேண்டும், செங்கொடி சங்கத்தோடு பேச வேண்டும், நாங்கள் அடிமைகள் அல்ல, உயிரே போனாலும் எங்கள் செங்கொடியை கீழே இறக்க மாட்டோம் என்ற உழைப்பாளி மக்களின் குரலை ஏற்றுக்கொள்ளாமல் நிலவுடமையாளர்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் தொடுத்த தாக்குதலில் 44 பேர் எரிந்து கரிக்கட்டைகளாய்ப் போனது ஒரு கறுப்பு நிகழ்வு. அவர்கள் தஞ்சம் அடைந்த அந்த ஓலைக் குடிசைதான் ராமையாவின் குடிசை. அந்தக் குடிசை இன்று கம்பீரமாய் தொழிலாளிகள் விவசாயிகளின் பங்களிப்போடு வெண்மணி நினைவகமாய் மிளிர்ந்து நிற்கிறது!
      தொழிலாளி வர்க்கம் தனது நேச சக்தியான கிராமப்புற விவசாயிகளைத் தட்டி எழுப்பாமல், நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுவிக்காமல் இந்தியப் புரட்சிப் போராட்டத்தின் கடமைகளை நிறைவேற்ற முடியாது. இதற்கான போராட்டத்தில் தொழிலாளி விவசாயிகளை வலுவாக திரட்டுவோம். வர்க்கச் சுரண்டலுக்கு எதிராய், தீண்டாமைக்கு எதிராய் கம்பீரமாய் எழுந்து நிற்போம்!
டிசம்பர் 25 - வெண்மணி நினைவு தினம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா