Thursday, 26 December 2013

பொதுத்துறைகளைப் பாதுகாப்போம்

N.நாகநாதன், LIC - AIIEA

      ``ஆடுவோமே பள்ளு பாடுவோமே
      ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்`
என இந்திய தேசம் சுதந்திரம் அடையும் முன்னமே ஆனந்தக் கூத்தாடினான் பாரதி. எனினும், இந்தியா சுதந்திரம் பெற்ற போது நம்முன் பல சவால்கள் காத்திருந்தன. அடிப்படையில் விவசாய நாடான நம் தேசத்தில், தொழிற்புரட்சியின் பலனாக மேற்கு நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி, தாக்கத்தை உண்டாக்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான மின்சாரம், போக்குவரத்து, அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, கனிமவள உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய அன்றைய பெரு முதலாளிகளில் யாரும் முன்வரவில்லை. (உடனடியாக இலாபம் கிடைக்காதே!)

      தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள (Technical Know How) அமெரிக்க முதலாளித்துவம் மறுத்துவிட்டது. அதே சமயம் அன்றைய சோவியத் நமக்கு உதவி புரிந்தது. இத்தகைய பின்னணியில், நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் நலனையும் முன்னிறுத்தி, அரசின் முதலீட்டுடன் துவங்கப்பட்டதே பொதுத்துறை நிறுவனங்கள். அரசின் முதலீடு சிறிதென்றபோதிலும் ஊழியர்களின் உன்னதமான உழைப்பினால் உலக அரங்கில் இந்திய தேசம் ஒரு சுய சார்பு நிலையை (Self reliance) அடைய பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் பங்காற்றின.
      இந்திய தேசத்தின் `திருக்கோயில்கள்' என பண்டித நேருவினால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு அடிபணிந்து சிதைக்கும் பணி 1980களின் பிற்பகுதியில் நேருவின் பேரனான ராஜீவ் காந்தியால் துவக்கப்பட்டது என்பது பெரும் சோகம். 1991ல் இன்றைய பிரதரும் அன்றைய நிதி அமைச்சருமான மன்மோகன் சிங்கினால் பின்பற்றப்பட்ட நவீன தாராளமயக் கொள்(ளை)கைகளினால் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.
      2008ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எனும் சுழலில் இருந்து இந்தியா தப்பித்தது என்றால், அதற்கு முழு முதற் காரணம் வலுவான பொதுத்துறை நிறுவனங்கள்தான்.
      2020ல் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட மிகப் பெரிய சந்தையாக இந்தியா திகழப் போவதை அறிந்த அந்நிய நிதி மூலதனம் ஆட்சியாளர்களுக்கு நெருக்குதல் கொடுத்து பொதுத்துறைகளை கபளீகரம் செய்ய முயன்று வருகின்றது.
      காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசுகள் இம்முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. என்.எல்.சி. தொழிலாளர்களின் வலுவான போராட்டத்தினால், என்.எல்.சி. பங்கு விற்பனை தற்சமயம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எல்.ஐ.சி.யிலும் 20 ஆண்டுகளாகத் தொடர் போராட்டத்தினால் பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனினும், தனியார்மய ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை. இடதுசாரிகளின் தலையீட்டின் காரணமாக காங்கிரஸ்

தலைமையிலான ம.ட.அ.-ஐ அரசினால் 2004-08 காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனையைச் செயல்படுத்த முடியவில்லை என்பதும் காங்கிரசுக்கு மாற்றாக ஊடகங்களால் போற்றப்படும் பாஜக ஆட்சியில்தான் பொதுத்துறை பங்கு விற்பனைக்கென்று ஒரு கேபினட் அமைச்சரை (திரு.அருண் ஷோரி) நியமித்ததும் நினைவுகூரத்தக்கது. எனவே, சாதி, மத, இன, மொழி, துறை பாகுபாடின்றி உழைப்பாளி மக்கள் ஓரணியில் திரண்டு தனியார்மயக் கொள்கைக்கெதிரான அரசியல் போராட்டத்தின் மூலமே பொதுத் துறைகளை பாதுகாக்க முடியும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவரும் உறுதியேற்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா