S.சுகுமார் 266/C858
ராஜேசுக்கு இன்று வேலை இல்லை; அவனது வீட்டில் உள்ளவர்களோடும், தெருவில்
உள்ளவர்களோடும் பொழுதைப் போக்க கிடைக்கும் மகிழ்ச்சியான நாள் இந்த ஞாயிற்றுக் கிழமைதான்.
சென்னையையொட்டி அமைந்துள்ள கிராமத்தில்தான் இவனது வீடு இருக்கிறது! அப்பா விட்டுச்
சென்ற விளைநிலம் கொஞ்சம் இருக்கிறது. அதில் கிடைக்கும் கொஞ்சம் வருமானம் குடும்பத்துக்கே
போதாத போது, நகரத்துக்கு வந்து ஒரு தொழிற்சாலையில் கான்டிராக்டில் வேலை பார்ப்பது குடும்பத்துக்கு
உதவியாக இருக்கிறது! இவன் சம்பாதிக்கும் சொற்ப சம்பளம் கூட அந்தக் குடும்பத்துக்கு
முதுகெலும்பாக இருக்கிறது!
வாரம் முழுவதும் உழைத்து இன்று வீட்டில் இருக்கும் மகனுக்குக் காரசாரமாக ஏதாவது
சமைத்துப் போட வேண்டும் என நினைத்து கடைக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டு
வீடு திரும்பினாள் அம்மா.
மீன் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது! ஆமாம் சாதாரண மண் அடுப்பில், மண் சட்டியில்
மீன் குழம்பை அம்மா இவ்வளவு மணமாக எப்படிச் சமைக்கிறாள்? இன்றைக்கு
ஒரு கை பிடித்துவிட வேண்டியதுதான். கான்ட்ராக்ட் தொழிலாளி என்பதால் தினமும் கேண்டீனில்
ஆறிப்போனச் சோற்றின் மேலேயே எல்லாவற்றையும் கொட்டிக் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு
அலுத்துப்போயிருந்த ராஜேஷ் இன்று மதியம் அம்மா அன்பாகப் பரிமாறிய உணவை மகிழ்ச்சியாக
குடும்பத்துடன் உண்டு முடித்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் அம்மா ஆரம்பித்தாள், ``ராஜேசு...
தம்பிக்கு ஸ்கூல்ல பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்றாங்களாம்பா இன்னிக்கு சம்பளம்
கொடுப்பாங்க... நாளைக்கு கட்டிடலாம்னு சொன்னீயே என்ன ஆச்சி''. ``அம்மா, இன்னிக்கு பணம் இல்ல நாளைக்குத் தர்றதா சொல்லியிருக்காங்கம்மா, நாளைக்கு
மறுநாள் கட்டிடுறோம்னு சொல்லுமா'' என்று கூறினான் ராஜேஷ்.
``மழைக்காலம் வந்துடுச்சி வீட்டுக் கூரை மேல தண்ணீர் ஒழுகிக்கிட்டே இருக்குது. ரொம்ப
மோசமாவதற்குள் எப்படியாவது அதையும் சரி செஞ்சாகணும். இல்லன்னா வீட்டுல படுக்க முடியாது.
உடனே கவனிக்கணும்'' என்றாள் அம்மா. ``நாளைக்கு சம்பளம் வரட்டும்
எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிடலாம்... ஆகட்டும்மா'' என்று
அம்மாவுக்கு உறுதியளித்தான்
ராஜேஷ்.
மறுநாள் வழக்கம் போல் காலையில் பஸ் பிடித்து வேலைக்குச் சென்றான் ராஜேஷ். இன்று
செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ராஜேஷிடம் அதிகாரிகள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஏணி மேலே ஏறி கிரேன் இணைப்பை சரி செய்து கொண்டிருந்த வேளையில்
நிலை தடுமாறி கீழே விழுந்தான்! தலைக்குப்புற விழுந்ததனால் கழுத்துப் பகுதியிலும், மார்புப்
பகுதியிலும் பலத்த அடிபட்டு செயலிழந்த நிலையில் உடனடியாக முதலுதவி செய்து, பின்
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். மெடிக்கிளைம் வசதி இல்லாத காண்ட்ராக்ட் தொழிலாளி; பெரும்
பணம் செலவு செய்து தரமான மருத்துவ வசதி பெற வழி இல்லையே! எனவே, அரசு
மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டான் ராஜேஷ்.
எக்ஸ்ரே,
ஈசிஜி எடுத்து வாருங்கள் என்று அழைத்துச் சென்றவர்களிடம் கூறினார்கள்
மருத்துவர்கள். ஒவ்வொரு டெஸ்டுக்குப் போகும் போதும் அங்கே ஏராளமான நோயாளிகள் கியூவில்
காத்திருந்ததால் நேரம் கடந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் கம்பெனியில் இருந்து
போன் அழைப்பு வந்தது. ``ஆம்புலன்ஸ் எப்பத்தான் வரும்? இங்க
இன்னொரு கேஸ் இருக்குது உடனே வா'' என்று ஆம்புலன்சுக்கு அவசர அழைப்பு விடுத்தார்கள் அதிகாரிகள்.
``அட்மிஷனுக்கு வெயிட் பன்றோம் சார். பெட் இல்லைன்னு சொல்றாங்க. நாங்க என்ன சார்
செய்றது?''
``ஆஸ்பத்திரியில சேர்த்தாச்சில்ல. அவன் வீட்டுக்குத் தகவல் சொல்லி
அனுப்பிடுங்க. அவர்கள் வந்து பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் ஆம்புலன்சை எடுத்துக்கிட்டு
சீக்கிரமா வந்து சேருங்க'' என்று மனதில் ஈரமில்லாமல் அதிகாரிகள் ஆம்புலன்சை அவசரப்படுத்தினார்கள்.
ராஜேஷின் வீட்டில் தகவல் கிடைத்து அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். மகன் எங்கே
இருக்கிறான் என்று கேட்டுக் கேட்டு ஒரு வழியாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் ராஜேஷின்
தாயும் குடும்பத்தாரும்.
``ராஜேசுக்காக வந்திருக்கீங்களா?'' என்று நர்ஸ் கேட்டார். ``ஆமாம்'' என்றவர்கள்
நர்ஸ் கூறியதைக் கேட்டு இடி தாக்கியதைப் போல வந்தவர்கள் அனைவரும் நிலை குலைந்து போனார்கள்.
ஆம் முறையான, தேவையான சிகிச்சை கிடைக்காததால் அந்த ஏழைத் தொழிலாளியின்
உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா