Friday 7 March 2014

மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - எளிய குறிப்புகள் - 4

R.பத்மநாபன் - 760/L054

            சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையில் உலகச் சமூகம், மனிதம் மற்றும் மனிதன் பற்றி இன்னும் விரிவாக அறிவோம். மனிதனுக்கும், மூலதனத்துக்கும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள இடைவெளியைக் கணக்கிட முடியாது. மூலதனம் இயங்கி பெரும் லாபம் ஈட்டினால் மட்டுமே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்க முடியும். இதனால் உலகம் முழுதும் ஒரே மாதிரியான கலாச்சாரமும், பண்பாடும் இருந்தால்தான் தற்போதைய நுகர்வோர் கலாச்சார சந்தையைப் பாதுகாக்க முடியும் என்ற புதிய அணுகுமுறை கையாளப்படுகிறது.

            கட்டுப்பாடற்ற சந்தைமுறையை அனைத்து நாடுகளும் அமுல்படுத்த வேண்டும் என நிர்பந்தம் உருவாகி விட்டது. அரசுகள் சமூக ஜனநாயக கோட்பாடுகள் என்ற கட்டுப்பாட்டு நிலையை முற்றிலும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதன் விளைவாகத் தற்போது மனித நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை, முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையைப் பின்பற்றித்தான் சந்தையின் லாபம் பாதுகாக்கப்படுகிறது. மனிதன் உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய லாபத்தின் ஒரு பங்கு, மனிதன் உழைக்கும் சக்தி குறைந்த நிலையை அடையும்போது, அவன் வாழ்வதற்கு ஒதுக்கிய நிதிகளைக் கூட பறிக்கத் துவங்கி, மனிதத்துவமற்ற நிலைக்கு சமூகம் தள்ளப்படுகிறது.
            பொருட்கள் உற்பத்தி முறையில் லாபம் என்ற நிலையில் இருந்த மூலதனம், தற்போது நிதிக்கொள்கை என்ற புதிய உத்தியைப் பின்பற்றத் துவங்கிவிட்டது. பொருட்கள் உற்பத்தி செய்யாமலேயே பெரும் லாபம் என்ற கோட்பாடு உலகம் முழுவதும் செயல்படத் துவங்கிவிட்டது. அதன் விளைவாக மனித உழைப்புச் சக்தியின் பயன்பாடு இல்லாமல் இலாபம் என்ற நிலை உருவாகி விட்டது. இஃது எதிலும் சூதும், தந்திரங்களும் நிறைந்த ஒரு மாயச் சூழ்நிலை உருவாகி, சந்தை நிலையற்ற தன்மையை அடையத் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் மனித உழைப்பு குறையத் துவங்கியதால் சமூகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகத் துவங்கி விட்டது.
            ஆரோக்கியமான சந்தை என்பது அத்தியாவசியப் பொருட்கள் முதல் நிலையிலும், சமூகம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி அடையத் தேவையான பொருட்கள் உற்பத்தி இரண்டாம் நிலையிலும், சமூகம் அடுத்த கட்ட நிலையை அடையும் ஆராய்ச்சிக்கான பொருட்கள் மூன்றாம் நிலையிலும் இருக்க வேண்டும். அத்தகைய சந்தையை உருவாக்க உலகத்தில் சில நாடுகள் முயற்சி செய்து, அங்குள்ள மனிதர்கள் புதிய சமூகமாக உருவாகத் தேவையான கருத்துக்களைப் பதிக்கின்றனர். மனிதன், மனிதம், சமூகம் இவற்றிற்கான இயல்பான தொடர்புகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
            இத்தகைய முயற்சிகள் வெற்றி பெற்றால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல் உலகில் மனித குலம் தொடர்ந்து வாழ்வதற்கும், மனிதப் பண்புடன் நீடித்து இருப்பதற்கும் சாத்தியமாகும். ஆரம்பத்தில் இருந்த சம பங்கீட்டுமுறை சமூகம் உருவானால்தான் அமைதியான சூழலுடன் இயற்கையோடு இணைந்து இன்னும் பல கோடி ஆண்டுகள் இவ்வுலகம் இருக்கும் என்பது திண்ணம்.                       (முற்றும்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா