Friday 7 March 2014

பொக்கிஷம்: அறிவுத் தேடலின் பயணம்

அ.பிரபாகரன், எவரெடி தொழிலகம்

      பெருங்காடொன்றினை அங்குலப் புழு அளப்பது போன்று இந்தியாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மணம் தேடியபடியே பயணம் செய்தவர் அவர். கன்ஃபூசிய சிந்தனை மரபில் வளர்ந்து, பௌத்தத்தை தழுவி துறவியானது முதல் தன்னை ஒப்படைத்துக் கொண்ட பௌத்தத்தின் ஆழ, அகலங்களை அறிய பேரார்வம் ஏற்பட்டது. அதனால் பௌத்தம் முளைத்த இந்தியா நோக்கிப் புறப்பட்டார். ஆம்! அவர்தான் யுவான்சுவாங்.

      சீன எல்லையில் பயணித்து எல்லையைக் கடக்கும்போது பாதுகாப்பு படையினரால் யுவான்சுவாங் கைது செய்யப்படுகிறார். பின்பு அவரை அருகிலிருக்கும் புத்த மடாலயம் ஒன்றில் அடைத்து, இந்தியா செல்லக் கூடாதென சீன மன்னரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கட்டளையிட்டனர். இப்படி என்னை  இந்த மடாலயத்தில் அடைத்தால் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேனென்று தனது கத்தியைக் கையில் எடுத்தார் யுவான்சுவாங். ஒரு வழியாக அவரது மனத்துணிவையும், விருப்பத்தையும் அறிந்த காவலர்கள் எல்லை கடந்து இந்தியா செல்ல அனுமதி அளிக்கின்றனர். பிறகு மேற்கு நோக்கிய பயணத்தை தான் கற்பிதம் செய்தபடி கோபி பாலைவனத்தை கடந்த போது வெயிலும், தாகமும் அவரை வாட்டியெடுத்தன. கொள்ளைக்காரர்கள் அவரின் நீள் பயணத்தின் போது அவரைத் தாக்கி உடமைகளைப் பறித்துக் கொண்டனர். ஒட்டகம், கோவேறு கழுதை, குதிரை மற்றும் கால்நடை பயணமாக மாறி மாறி கைபர் போலன் கனவாயை பெரும் முயற்சிக்குப் பின் கடந்தார்.
      அங்கிருந்து அவரை வரவேற்று பல்லக்கில் அமர்த்தி இந்தியாவுக்குள் அழைத்து வந்தனர். பிறகு பல்வேறு பௌத்த மடாலயங்களில் தங்கி மக்களின் வாழ்வியல் முறை மற்றும் கலாச்சார செயல்பாடுகளை குறிப்புகளாக எழுதினார். பல பௌத்த ஏடுகளைச் சேகரிக்கத் தொடங்கினார். யுவான்சுவாங்கின் இந்தியப் பயணம் குறித்த குறிப்புகள் பேரார்வத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தியாவில் பதினாறு ஆண்டுகள் பயணித்து குறிப்புகளாக எழுதியதை, தாமஸ் வாட்டர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
      காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி, பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற நகரங்களின் ஸ்தூபிகள், புத்தமடாலயங்கள் மற்றும் புத்த விகாரங்களைப் புள்ளிவிவரங்களோடு குறிப்பிடுகிறார். இந்தியாவில் நீண்ட நாட்கள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் தங்கிய வண்ணம் ஆய்வு செய்திருக்கிறார்.
      யுவான்சுவாங் எழுத்துக்களை வாசிக்கையில் அவர் ஒவ்வொரு நகரத்தில் நுழையும்போது, முதலில் அந்நகரத்தின் சுற்றளவு, நகர அமைப்பு,
கட்டடக் கலை, ஸ்தூபிகள், பௌத்த மடாலயங்கள் ஆகியவற்றை புனைவு மொழியின் தொனியில் உயிர்ப்புடன் அழகுபடக் கூறுகிறார். புத்தர் தன் ஆடைகளைத் துவைத்த நதிப்படுகையின் பாறை மற்றும் அதன் சுவடுகள் குறித்தும், மக்கள் உணவு உண்ட பின்பு குச்சியால் பல்சுத்தம் செய்யும் வழக்கத்தினையும் பதிவு செய்கிறார். அரசர்கள் நீராடும்போது பின்னணியில் இனிய இசையோடு பாடல் பாடியதனையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.
      காஞ்சிபுரம் வந்தபோது நகரெங்கும் சிவப்பு அங்கிகள் அணிந்த இளம் புத்த பிக்குகள் திரிந்தலைந்ததையும், இந்நகர மக்கள் கல்வியை உன்னதமாக மதிப்பவர்கள் என்றும், அவர்களுடைய எழுத்து மொழியும், பேச்சு மொழியும் மைய இந்திய மக்களிடமிருந்து வேறுபடுகின்றன என விவரிக்கிறார். காஞ்சிபுரத்தின் பௌத்த பல்கலைக்கழகத்தில் யுவான்சுவாங் சிறப்புரையாற்றியிருக்கிறார். அச்சமயம் பல்லவர்களின் ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. யுவான்சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகளில் மக்களின் கலாச்சாரச் செயல்பாடுகள் குறித்த பதிவுகள் தென்னிந்தியப் பகுதியில் தமிழகம் போன்றவற்றில் அழுத்தமின்றி விவரனைகள் குறைவாகக் காணப்படுகின்றன. காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு இலங்கை சென்று மீண்டும் வட இந்தியாவின் பௌத்த மடாலயங்களில் தங்கி கி.பி.629 முதல் கி.பி.645 வரையிலான அவரது இந்தியப் பயணத்தை 20 ஆயிரம் மைல்களோடு நிறைவு செய்து கொள்கிறார்.
      இறுதியாக தனது தாயகமான சீனாவை நோக்கிப் புறப்படுகிறார். அந்நாட்டின் எல்லையில், எந்த அரசர் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாமெனத் தடுத்தாரோ, அவரோடு அமைச்சர்கள், நகர மக்கள் அனைவரும் குதூகலத்தோடு வரவேற்றனர். யுவான்சுவாங் கொண்டு வந்ததை முப்பது குதிரைகளில் ஏற்றிக் கொண்டார்கள். அவர் கொண்டு சென்றது விலையுயர்ந்த பொன்னோ, பொருளோ, ஆபரணங்களோ அல்ல. பாலி மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 657 பௌத்த மூல நூல்கள் மட்டுமே.
      அன்று அறிவுத் தேடலுக்கு புறப்பட்ட யுவான்சுவாங்கின் பயண நூல், இன்று இவ்வுலகின் முன்பு கண்டெடுக்கப் பட்ட நூல்கள் அனைத்தையும் விட காலப்பெட்டகத்தின் பொக்கிஷமாக பரிணமிக்கிறது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா