Friday, 7 March 2014

சிலிர்ப்பூட்டும் சிறுகவிதை

தனசம்பத் 255/J144

சுடர்விடும் சூரியனை
            கார்மேகம் சூழ்ந்திருக்க
வானத்தின் வர்ணத்தை - தன்
            வசமாக்கி வைத்திருக்கும்
வானவில் பொலிவு கூட
            அழகான ஒரு கவிதை

பசி என்று வந்தார்க்கு
            பரிவுடன் உணவளித்து
ருசி கூடப் பாராது - அவர்
            புசிக்கின்ற அழகைப் பார்
அவர் மகிழ்வினிலே மலர்ந்திடுமே
            அழகான ஒரு கவிதை


தாயின் கருவறையில்
            சிறைபட்ட சிசு அதுவும்
விடைபெற்று வெளிவந்து
            வீரிட்டு அழுகின்ற
அழகான குரலோசை
            சுமந்தவள் செவிகளுக்கு
சுகமான ஓர் கவிதை

வெற்றிக்குத் தடையே
            விதிதான் என்றன்றி
கற்றறிந்த தன் மதியால்
            கண்டிடலாம் வெகுமதியை என
உத்வேகம் கொண்டிருந்தால்
            உனக்குள்ளே உதித்துவிடும்
உன்னதமாய் ஓர் கவிதை

அறிவுப் பசிக்கு
            அன்றாடம் உணவிட்டு
அயராது உழைக்கின்ற
            ஆசானின் அறிவுரையை
மதிக்கின்ற மாணவனின்
            தேனினும் இனிய தேர்வு முடிவுகள்
திகட்டாத ஓர் கவிதை

வியர்வை சிந்தி உழைத்து
            உயர்வை நீ எட்டியதும்
அயர்வை அடைத்திடும் நேரம்
            அழகாய் அருகழைத்து
அரவணைக்கும் தாயுள்ளம்

            அழகான ஓர் கவிதை

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா