Friday, 7 March 2014

இருட்டடிப்பு

K.N.சஜீவகுமார் 217 /37918

      2014 தேர்தல் ஆண்டு. ஒரு தவறான அரசு மத்தியில் அமைந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே; அதனால் எச்சரிக்கை தேவை. சரியாக வரியை செலுத்துபவன் தொழிலாளி, ஆனால் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைக் குவிப்பது முதலாளிகள். வரிசையில் நின்று ஓட்டு கூட போடாத பெரு முதலாளிகள், ஆட்சி செய்பவர்களை ஆட்டிப் படைக்கின்றனர். <_ம்>: குறைந்தபட்சம் ரூ.10,000 சம்பளம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று கூறிய பிரதமர், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைத் தடுத்தது யார்?


      நீங்கள் 1% நாங்கள் 99% என்ற கோஷத்துடன் வால் ஸ்டிரீட் போராட்டத்தைப் பார்த்தோம். இதன் அர்த்தம் என்ன? 99% மக்களின் எதிர்காலத்தை 1% பெரு முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். இந்த காலகட்டத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தில் தனியார் மயம்.

      முதலாளித்துவம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முன் வராது. வேலையில்லா திண்டாட்டம் அதிகமானால் தான் மக்கள் மத்தியில் வேலைக்கான போட்டி ஏற்பட்டு குறைந்த கூலிக்கு வேலை செய்ய முன்வருவார்கள். அதனால், உழைப்புச் சுரண்டல் எளிதாகிறது. பொறியியல் படித்துவிட்டு சம்பந்தமில்லாத வேலையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர் எத்தனையோ பேர். நாம் இன்று அனுபவிக்கும் பென்ஷன், கிராஜிவிட்டி, ரேஷன் போன்றவை சோவியத் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டவை. சோசலிச கருத்துகள் உலகம் முழுவதும் பரவக்கூடாது என்பதால், முதலாளித்துவ நாடுகள் அதைத் தமது நாடுகளில் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கோ ஏற்பட்ட சோசலிசப் புரட்சியால் நமக்கு இவ்வளவு நன்மை என்றால், நம் நாட்டில் சோசலிசம் வந்தால் தொழிலாளி வர்க்கம் அடையவிருக்கும் நன்மையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

      கியூபாவில் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 4.2 தான். வெனிசுலாவில் பெட்ரோல் வர்த்தகம் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் அந்த இலாபத்தில் அனைவருக்கும் இலவச வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் நெருக்கடியில் வீழ்ந்த போது சீனா வளர்ச்சிப் பாதையில் சென்றது எப்படி? இதற்கெல்லாம் காரணம் சோசலிச பாதையே என்பதை எந்த ஊடகமாவது கூறுகிறதா? இந்த வளர்ச்சி யாவும் அமெரிக்காவின் சதிகளை மீறி பெற்ற வெற்றிகளாகும்.


      எனவே, கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்காத தனிநபர்களை முன்னிறுத்தாமல் நமக்கான மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளை தேர்ந்தெடுத்தால் தான் தொழிலாளர்களுக்கு விடிவு.    உலக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ சதிகளை மீறி முதலாளித்துவம் வெற்றி பெற்றது. அது போல முதலாளித்துவத்தின் இருட்டடிப்புகளையும் மீறி சோசலிஷம் வெற்றி பெறும். இறுதி வெற்றி தொழிலாளர் வர்க்கத்திற்கே!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா