Tuesday, 11 March 2014

சமூக வலைத்தளங்களும் சிக்கல்களும்

சு.சக்கீர் - 240/J030

      ``கழிவறைகளில் கிறுக்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதை கவனித்தீர்களா?'' கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் இந்த சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார்.
      ``அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?'' என்றார் அவர். ``என்னவாக இருக்கும்'' என்றேன். ``அவர்கள் எல்லாம் இப்போது ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றார் நண்பர்.

      செல்பேசியின் பிரச்சாரம் புயல்வேகத்தில் இருந்தது என்றால், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி சூறாவளி போல அமைந்தது எனக் கூறலாம். சாமானிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் உள்ளக் குமுறல்களையும், படைப்பாற்றலையும் விளம்பரப்படுத்த சமூக வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால், சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், ஒன்றுபடுவோம்! போராடுவோம்! என்ற சமூக சிந்தனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் செயல்பாடுகளும், ஆளும் வர்க்கத்தின் நாசகர பொருளாதாரக் கொள்கைகளும் இந்த அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளான ஓர் காலகட்டம் இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை.
      அரசியல் இயக்கங்கள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி போன்ற துணை அமைப்புகளை உருவாக்கி, தளத்தை விரிவுபடுத்தும் நிலைமை கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று இணையத்திலும் ஆதரவாளர்களைத் திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபடத் துவங்கியுள்ளன. நரேந்திர மோடியைப் பிரபலப்படுத்த, மாநாடுகளை நடத்தித் தர என பன்னாட்டு விளம்பர நிறுவனங்களுடன் கோடிக்கணக்கான ரூபாய்களில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் காலம் இது. பால்தாக்கரேயின் மறைவை ஒட்டி ஏற்பட்ட வன்முறைகளை விமர்சனம் செய்தவரும், அதற்குத் துணைபோன வாலிப பெண்மணியும், சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்ததை நாம் மறக்க முடியுமா? முகநூலில் போஸ்ட் செய்யும்போதும், ஷேர் செய்யும்போதும், லைக் போடும்போதும் ஒன்றுக்கு பத்துமுறை யோசிக்கவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதே அண்மைக்கால அனுபவம்.
      இதற்கும் மேலாக சமூக வலைத்தளங்கள் அனைத்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி கண்காணிப்பில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுக்
கொண்டிருக்கும் அரசியல் மாறுதல்களை சரியான முறையில் கணிப்பதற்கும், தேவையிருந்தால் அதில் தலையிடுவதற்கும், பொருளாதாரத் திணிப்பை விரைவு படுத்துவதற்கும் ஏகாதிபத்தியத்திற்கு இதன் மூலமாக வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன.
      அரசியல் இயக்கங்களில் பணியாற்றுபவர்கள், சமூக வலைத்தளங்களில் சொந்தக் கருத்துகளை பதிவு செய்வது, தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் என்று சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். தனி நபர் கருத்துக்கும், அமைப்புரீதியான முடிவுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள், சாமானிய மக்களைக் குழப்பி விடும் என்பதில் ஐயமில்லை.

      சமூக வலைத்தளங்கள் என்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக உருவானது என்பதால், அதை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. அதே நேரத்தில் தனிநபர்களை இழிவுபடுத்துவதற்கோ, குடும்ப உறவுகளை சிதைப்பதற்கோ இணையத்தைப் பயன்படுத்தாமல், சமூக மாற்றத்திற்கான கருவியாக அதை மாற்றுவோம் என்பதே நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களின் வேண்டுகோளாகும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா