Tuesday, 11 March 2014

வண்ணங்களை விரிவாக்கு!

M.பழனி - 9952445378 - செம்பிய மணலி

உட்கார் நண்பா நலந்தானா - நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா - உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா
புல்லாய் பிறந்தேன் நானென்று - நீ
புலம்ப வேண்டாம் - நெல் கூட
புல்லின் இனத்தை சேர்ந்தது தான் - அது
பூமியின் பசியைப் போக்கிடுதே!
கடலில் நான் ஒரு துளியென்று - நீ
கரைந்து வாழ்வதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று - நீ
காட்டு உந்தன் தலைதூக்கு!
மனைவி மக்கள் உறவென்று - உன்
மனத்தின் எல்லையைச் சுருக்காதே
திண்ணை தானா உன் தேசம்?
தெரு ஒன்றேவா உன்னுலகம்?
திண்ணையை இடித்து தெருவாக்கு! - உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை - அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப் பந்து என்ன விலை - உன்
புகழைத் தந்து வாங்கும் விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம்! - வா

நல்லதை எண்ணி செயல்படுவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா