S.சுகுமார், 266/C858
களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான் வேலு. அவன் போகும்
வேலைக்கு சரியான கூலியோ வேறு எந்த சலுகைகளோ கிடையாது எனினும், ஏதாவது செய்து வாழ்க்கையை ஓட்டித்தானே ஆக வேண்டியிருக்கிறது! எப்போதும் சுறுசுறுப்பாக
இருப்பவன் இன்று சோர்வுடன் வந்திருப்பதைப் பார்த்து, ``இன்னாயா
ஆச்சி உனக்கு'' என்று கணவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்
ராசாத்தி. ``இன்னாயா இப்பிடி கொதிக்குது; போய் ஒரு டீ வாங்கிக்கினு வரட்டா'' என்றாள். பசி என்றாலும்,
உடம்புக்கு ஏதாவது என்றாலும் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு டீ தான்!
வாட்டி வதைக்கும் வறுமையில் உழலும் ஏழைகளுக்கு உள்ள
வசதியும், வாய்ப்பும் அதுதானே! கணவன் இருக்கும் நிலைமையைப் பார்த்து
ராசாத்தி வேலை பார்க்கும் வீட்டு உரிமையாளரிடம் சென்று இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு
பக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றாள். டெஸ்ட், அது, இதுன்னு எக்கச்சக்கமா டாக்டர் செலவு வைத்துவிடப்போகிறாரோ
என்று பயந்து ``கொஞ்ச நாளாவே டல்லா இருக்கார் சார். இவருக்கு
ஒரு ஊசி போடுங்க'' என்றாள். ``பேஷன்ட்டை
கூட்டி வந்துட்ட இல்ல, அவருக்கு என்ன பண்ணனும்னு நான் தான் முடிவு
பண்ணனும்'' என்றார் டாக்டர். இவளுக்குப் பக் பக் என்றது.
வேலுவைச் சோதித்த டாக்டர், ``கொஞ்சம்
வீக்கா இருக்கார். பிரஷர் ரொம்ப லோவா இருக்குது. பயப்பட ஒன்னுமில்ல. நல்ல காய்கறி,
பழங்கள், கீரைனு சத்தான ஆகாரமாக கொடுங்க. தினமும்
இரண்டு ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி பழங்கள்
சாப்பிடணும். இந்த மருந்தை ஒரு வாரம் கொடுங்க'' என்று சீட்டில்
மருந்து எழுதிக் கொடுத்தார். பீஸ் எவ்வளவு என்று நர்சிடம் கேட்க, இருநூறு ரூபாய் என்றதும், கையில் இருந்த இருநூறு ரூபாயை
எடுத்துக் கொடுத்துவிட்டு, மருந்து வாங்க கையில் பணம் இல்லாமல்
என்ன செய்வதென்று யோசித்தவாறே மருந்து கடையில் கொடுத்து, ``இதுக்கு
எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க'' என்று கேட்டாள். ``எறனூத்தம்பது ரூபா ஆவும்'' என்று கடைக்காரர் சொல்ல மருந்து
சீட்டை வாங்கிக் கொண்டு திரும்பினாள்.
மனைவியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் வேலு. மிகவும்
சங்கடமாக இருந்தது அவனுக்கு. சாதாரண வைத்திய செலவுக்குக் கூட வழி இல்லாம மனைவிக்குக்
கஷ்டம் கொடுக்கிறோமே என்று எண்ணி வருந்தினான். வீட்டுக்கு
கணவனைக் கொண்டு வந்து விட்டு விட்டு வீட்டுக்கருகில் உள்ளவர்களிடம் சென்று முன்னூறு
ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, மருந்து மாத்திரைகளை
வாங்கிக் கொண்டு, மீதியிருந்த பணத்தில் இரண்டு ஆப்பிள்,
இரண்டு ஆரஞ்சு பழங்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ராசாத்தி.
மறுநாள் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு வீடு
திரும்பினான் வேலு. அவனுக்கு முன்னதாகவே அவனது மனைவியும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு
வீட்டுக்கு வந்து கணவன் வருகைக்காகக் காத்திருந்தாள். ``எப்பிடியா
இருக்குது உடம்புக்கு?'' ``எனக்கு ஒன்னுமில்லையே, நான் நல்லாத்தானே இருக்கேன்'' என்று மனைவியைத் தைரியப்படுத்தினான்.
மனைவியின் கவனத்தைத் திசை திருப்பி, ``சரி... பசிக்குது ஏதாவது
குடு'' என்றான்.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்த கஞ்சியை ஆற்றிக் கொண்டு
வந்து அவன் முன் வைத்தாள். இருவரும் கஞ்சியைக் குடித்துக் கொண்டிருக்கும்போது,
``சத்தான ஆகாரம் கொடுங்க'' என்று டாக்டர் சொன்னது
நினைவில் வந்து வந்து போனது ராசாத்திக்கு. இடையிடையே
தொலைக்காட்சியும் குறுக்கிட்டது. செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர்... ``மக்கள் தியாகம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரம்மாண்டமான கூட்டத்தில்
பிரதமர் அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா