Tuesday, 11 March 2014

பூமி என்ற பூலோக சொர்க்கம்

V.கோவிந்தசாமி - 352/K302 Mechanical Maintenance

      பூமியின் மேற்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வெண்மேகங்களும், கரு மேகங்களும் சஞ்சரிக்கின்றன. பதினோரு கிலோ மீட்டர் உயரத்திற்கு அப்பால் எந்த மேகமும் இல்லை. பதினெட்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் எவ்வித சலனமும் இன்றி அமைதி குடி கொண்டிருக்கிறது என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். பவன மண்டலத்தில் உயரே போகப் போக வெப்பம் குறைந்து கொண்டே போகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 16 கிலோமீட்டர் உயரம் வரை நைட்ரஜன், ஆக்சிஜன் ஜடவாயுக்களும், அதற்கு மேலே ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோனும் உள்ளன. ஓசோன் என்பது ஆக்சிஜனின் மற்றொரு வகை. சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தினால் ஆக்சிஜன் ஓசோனாக மாறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் உட்புறத்தை குடைந்தால் மண்ணாங்கட்டி, சரளைக் கல், கூழாங்கல் பாறைகள் உள்ளன. 40 அடி தோண்டிய பின் நீர் ஊறுகிறது. ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழே போனால் செடிமென்டரி பாறைகள் உள்ளன. பூமியைக் குடைந்து கொண்டு கீழே செல்லச் செல்ல வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு 35 மீட்டருக்கும் ஒரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உயர்கிறது. 100 கி.மீ. ஆழத்தில் 3000 டிகிரி வெப்பம் இருக்கும். எனவே, பூமியின் தரைப்பரப்பு 100 கி.மீ. ஆழத்துக்கு அதிகமாக இருக்க முடியாது என்று மதிப்பீடு. எனவே, நமது பூமியின் மேலோட்டப்பகுதி என்பது ஒரு ஆப்பிள் பழத்தின் தோலைப் போன்றது. பூமியின் மையத்தில் உள்ள எரி குழம்பு, ஒட்டுக் குழம்பு பகுதியில் ஏற்படும் .துவாரங்களின் வழியே வெளியேறுகிறது. அதையே எரிமலை என்கிறோம்.

      எரி குழம்பாக இருந்த பூமி ஆறி வருகிறது. அதன் பின்பு பூமியில் உலோகங்கள் போலவே அலோகங்களும் உருவாயின. அலோகங்கள் என்பது திடமற்ற வாயுக்கள்; தாது உப்புக்கள் போன்றவையாகும். பிரபல அணு விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் விஞ்ஞானத்தை ஏற்காத சிலர் ``பூமி சுற்றினால் மனிதர்களும், மற்றவைகளும் காற்றிலே பறந்துவிடுவோம் அல்லவா? எனவே பூமி சுற்றுகிறது என்பது பொய்தானே?` என்று கேட்டனர். அதற்கு ஐன்ஸ்டீன் அவர்கள், ``பூமியின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான காந்த மண்டலம் சகல பொருட்களையும் ஈர்த்துப் பிடித்து வைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, புவியின் ஈர்ப்பு சக்தி அதன் மேற்பரப்பில் வரும் பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் பூமி சுற்றினாலும் மனிதர்களுக்கும் மற்றவைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை'' என்றார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. பூமியின் வயதை நீங்கள் எப்படி தீர்மானித்து கூறுகிறீர்கள்? என்று ஐன்ஸ்டீனிடம் கேட்டனர். அதற்கு அவர், ``நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, சாலையின் ஓரத்தில் சிகரெட் ஒன்று அணையாமல் புகைந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தவுடன், ஐந்து அல்லது பத்து நிமிடம் முன்னால் வீசி எறிந்திருக்க வேண்டும் என்று யூகிக்க முடியும். அது போலத்தான் இந்தப் பூமி நெருப்புக் கோளமாக இருந்து அணைந்திருக்கிறது. நெருப்பு இன்னும் உள்ளது. எனவே, பூமியின் வயதை ஓரளவு நெருக்கமாக விஞ்ஞானிகளால் ஊகித்தறிய முடியும் என்று தெளிவு படுத்தினார்.
      நண்பர்களே! பூமி... ஒரு பூலோக சொர்க்கம்... பூமியைப் பற்றிய விபரங்கள் நாம் அவசியம் அறிய வேண்டியவை என்ற எண்ணத்தில் இருந்து பிறந்ததே இக்கட்டுரை.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா