270\38313
சேசிஸ் அசெம்பிளி
மவுலிவாக்கம் கட்டிட விபத்து என்றாலும், மழைக்கு திருவள்ளூர் சுற்றுச் சுவர் இடிந்து வீழ்வது என்றாலும், பன்னாட்டு கம்பெனிகளின் ஆலை மூடல் என்றாலும் முதலில் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே!
இந்தியாவில் இருக்கும் அநேக துறைகளில் அதிக சட்டங்கள் கொண்ட துறையாக விளங்குவது தொழிலாளர்துறையாகும். ஆனால் நடைமுறையில் தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதும் இல்லை, பின்பற்றுங்கள் என்று ஆள்பவர்கள் சொல்வதும் இல்லை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அரசே தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுகிறது. பின் எப்படி முதலாளிகள் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிப்பார்கள்? தற்போது பொறுப்பேற்றிருக்கும் மத்திய அரசை சில ஊடகங்களும், முதலாளிகளும் ஆபத்பாந்தவனாக சித்தரித்தார்கள். விளைவு, காங்கிரஸ் செய்த அதே தவறைத்தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது. அது விவசாயம் என்றாலும், தொழில்துறை என்றாலும் இதே கதிதான். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து உள்ளன என்பதற்கு சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனம்.
Connecting people இப்போது Disconnecting workers ஆக மாறி 8000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. அதுவும் இளம்வயது தொழிலாளர்கள். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துவிட்டு, குறைந்த முதலீட்டில் கொள்ளை லாபம் பார்த்துவிட்டு, தற்போது அமெரிக்காவின் மைக்ரோசாஃப்டுக்கு விற்பனை ஆகிவிட்டது நோக்கியா. புரிந்துணர்வில் நிலம், நீர், நெருப்பு, காற்று என பஞ்ச பூதங்களையும் இலவசமாக வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு பட்டை நாமம் போடப்பட்டுள்ளது. முதலாளிகளிடம் இருந்து சுளையாக வரவேண்டிய வரி பாக்கியை வசூலிக்க திராணி இல்லாத அரசு, இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை தொழிலாளர்கள் தலையிலும், மக்கள் மீதும் வரிவிதிப்பு என்ற பெயரில் திணிக்கிறது. சங்கம் அமைக்கும் உரிமை, ஆலைகளில் உணவு உறுதி செய்து தருவது, 9 மாதங்கள் தொடர்ந்து ஒரு பணி செய்யப்பட்டால் அது நிரந்தரத் தன்மை கொண்டது போன்ற தொழிலாளர்கள் சட்டங்கள் காகிதத்தில் இருப்பது கூட முதலாளிகளுக்குச் சங்கடமாக உள்ளதால், அதை நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
SEZ (Special Economic Zone) எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் லட்சம் கோடி ரூபாய் இழப்புக்கு பின்னும் தற்போது NIMZ (National Investment Manufacturing Zone) என்று மாற்றி, SEZ மூலம் பகுதியாக ஆதிக்கம் செலுத்திய முதலாளிகளுக்கு நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி தொழிலாளர்களையும், தொழிலாளர் சட்டங்களையும் உடைக்கிறது இந்த NIMZ. முதல் கட்டமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் இது அமல் ஆகிறது <ஆதாரம் : Business Line>. இந்தியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப் போகிறார் என்று முதலாளிகளின் ஊடகங்கள் பெரிதாக ஊதின. ஆனால், தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பை அணைய வைப்பது வேதனைக்கு உரியதே!
ஒரு பொருளுக்கு மதிப்பை ஏற்படுத்துவது, அப்பொருளின் மீது உழைப்பைச் செலுத்தி உருவாக்கும் தொழிலாளர்களே! அப்படிப்பட்ட தொழிலாளர்களைப் புறக்கணிப்பதால், சமூகம் சமநிலை இழந்து சீர்கெட்டு, இரு வேறு இந்தியாவை உருவாக்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவது முதலாளிகளும், பங்குச் சந்தைகளும் அல்ல! உழைப்புச் சுரண்டப்பட்டு நிற்கும் தொழிலாளர்களே! அந்தத் தொழிலாளர்களுடைய நிலை உயர்ந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்ற உண்மையை உணரும் அரசு அமைந்தால் மட்டும்தான், இந்தியாவின் பொருளாதார நிலை மாறும்; இல்லை என்றால் இந்தியா பொருளாதாரத்தில் பின் தங்கியே இருக்கும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா