உரிமையாளர், டைம் அழைப்பிதழ்
போன்: 2599 1838
என்னுள் இருக்கும் பிரபஞ்ச ரகசியத்தை நான் ஒரு பொழுதும் மானிடனுக்குச் சொல்ல நினைத்தது இல்லை. என்னைப் பற்றி பல அறிவுஜீவிகள், தத்துவ ஞானிகள் விளக்கம் தந்து கொண்டே இருக்கின்றனர். இப்பிரபஞ்சம் உருவானது, பூமியில் ஜீவராசிகள் உருவானது, இவற்றின் முழு இரகசியம் எனக்குத்தான் தெரியும். ஏனென்றால் முதல் ஜீவராசியே என்னுள்தானே உருவானது. மேலும் உலகிலேயே மிகச் சிறிய, மிகப் பெரிய ஜீவராசிகள் என்னுள்தான் வாழ்கின்றன.
இப்பிரபஞ்சத்தில் நான் பல மாற்றங்களைச் செய்தவன். நான் உருவாக்கிய ஜீவராசிகளே என்னைப் பதம் பார்ப்பார்கள் என்பதற்காகத் தான் என்னை உவர் நீராக மாற்றிக் கொண்டேன். என்னுள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மனிதன் பெயர் சூட்டிய போதுதான் நான் பிறந்ததாக நினைக்க வேண்டாம். என்னுள் மறைந்திருக்கும் மர்ம ரகசியங்களை விட என்னுள் கலந்து கரைந்து இருக்கும் மர்ம ரகசியங்களே அதிகம். இது மேலும், மேலும் கூடிக் கொண்டே போகின்றது. என்னைச் சீண்டிப் பார்த்த பல வளர்ந்த நாடுகளை எச்சரிக்கை செய்துவிட்டு, இந்தியாவை நாசூக்காக முதல் முறையாக 2004 டிசம்பர் 26ல் எச்சரிக்கை செய்தேன்.
நான் மனித இனத்தின் மீது கோபமாக இருக்கிறேன். என்னுள் ஒவ்வொரு நாளும் பல ரசாயனக் கழிவுகளைக் கொண்டு வந்து விடும்போது பொங்கி எழ வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், நான் பொங்கினால் முதலில் அழிவது என்னையே நம்பி வாழும் இந்த மீனவச் சமுதாயம் என்பதற்காகவே என் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன்.
மனிதர்கள் என்னைக் குப்பைத் தொட்டியாக நினைக்கிறார்கள். மேலும் தேவையில்லாத காகிதங்களைச் சுமக்க நான் என்ன குப்பைத் தொட்டியா? பரிசோதனை செய்த அணுக் கழிவுகளை என்னுள் பதுக்குவது, கண்ணிவெடிகளை மறைத்து வைப்பது, சரக்குக் கப்பல்களில் கெட்டுப் போன தக்காளி, பீன்ஸ், வெங்காயம் போன்ற பொருட்களை என்னுள் கொட்டுவது, இவையெல்லாம் என் தொண்டைக் குழியை அறுப்பதற்குச் சமமாகக் கருதுகிறேன். இவைகளையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியும். என்னுள் வாழும் ஜீவராசிகளால் தாங்கிக் கொள்ள முடியுமா? என மனிதர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மேலும் பல கோடி இளைஞர்களை அழிக்கும் கொடூரமான போதைப் பொருட்களை என் மீது கடத்துவது, அப்பாவிப் பெண்களைக் கெடுத்து, அவர்களுடன் கல்லைக் கட்டி என்னுள் இறக்குவது. இத்தகைய செயல்களால் நான் தினம் தினம் தீட்டுப்பட்டு வாழ்கிறேன்.
என் மீது கழிவுகளைக் கொட்டி என் புனிதத் தன்மையை அழிக்கும் மனித இனத்திற்கு எதிராக எனது முதல் போராட்டத்தைச் சூரியன் வழியாக அண்டார்ட்டிகா பிரதேசத்தில் ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பனிப் பிரதேசங்கள் உருகுவதால் ஏற்படும் கடல் கொந்தளிப்பு அகிம்சையில் முடிவதும் வன்முறையில் முடிவதும் மனிதன் கையில்தான் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா