அ.ஜோசப்
பிரேம்நாத்
M.A.(His),
M.A.(Eco),B.G.L.
D.L.L., A.L.
250/L988
ஷாப்பிங்
என்றாலே இன்றைய சென்னை வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம்
தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கிவிட முடியும்.
இப்படி அந்த கால சென்னை வாசிகளுக்கு ஷாப்பிங் இடம் இருந்ததா? - இதற்கான விடையைத் தேடிய
போதுதான் மெட்ராசின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றி தெரிய வந்தது.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய சென்னை
சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் ஒரு பஜார் இருந்திருக்கிறது. இதன் பெயர் குஜிலி பஜார்.
பாரிமுனை கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் குஜராத்திகள் அதிகம் வசித்து
வந்தனர். ஏதோ ஒரு இளம் குஜராத்திப் பெண்ணைப் பார்த்து பரவசமாகிப் போன சென்னைவாசி உருகிமருகியதன்
விளைவே இந்த குஜிலி. குஜராத்தி + கிளி என்பதுதான் மெட்ராஸ் பாஷையில் குஜிலி ஆனதாம்.
குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று
வைத்துக் கொள்ளலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டுப் புத்தகங்கள்தான். வெறும் சினிமாப்
பாடல்கள் மட்டுமல்ல, புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், டீ என எந்தப்
பொருள் புதிதாக அறிமுகமானாலும் பாட்டு எழுதி இருக்கிறார்கள். குஜிலி பாடல்கள் என்றாலே
ஒரு கிக்தான். அன்றாடம் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களையும் பாட்டாக்கியிருக்கிறார்கள்.
அரை அணா இருந்தால் இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகம் வாங்கிவிடலாம். சாதாரண உப்புமாவில்
இருந்து உப்பு சத்தியாகிரகம் வரை எதையும் குஜிலி கவிஞர்கள் விட்டு வைக்கவில்லை. இந்திய
விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள் கைதான போது `அரெஸ்ட் பாட்டு' எழுதப்பட்டு மக்கள்
மத்தியில் சுடச்சுட விநியோகிக்கப்பட்டது.
குஜிலி பஜாருக்கு அருகிலேயே சைனா பஜார் இருந்தது.
சைனா பஜார் வீதி மாலை நேரத்தில் எப்போதும் ஜன நெருக்கமாகவே இருக்கும். துணிமணிகள்,
பழதினுசுகள், பொன்-வெள்ளி ஆபரணங்கள், செம்பு பித்தளை பாத்திரங்கள், மிட்டாய் தினுசுகள்,
வாசனை திரவியங்கள், குடை, ஜோடு, சொம்பு மற்றும் இங்கு கிடைக்காத பொருளே இல்லை. வேடிக்கை
பார்க்க இந்த பஜாருக்கு வந்தால் போதும். பொழுது போவதே தெரியாது. ஆனால் வேடிக்கை பார்ப்பதிலேயே
மனம் செலுத்தினால் `பர்ஸ்' அம்பேல்தான். ஏனென்றால் இவ்விடத்தில் முடிச்சவிக்கும் பேர்விழிகள்
ஏராளம்.
இப்படி எல்லாம் சென்னைவாசிகளின் மாலை நேரங்களை
ரம்மியமாக மாற்றிய குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
பர்மாவில் இருந்து குடியேறியவர்களுக்காக 1960களில் ஒதுக்கப்பட்ட பகுதிதான் பர்மா பஜார்.
அன்றைய காலத்தில் திருட்டுப் பொருட்களை விற்கும் கடைகள் இருந்தன என்பதால் பர்மா பஜாருக்கு
வெள்ளைக்காரர்கள் காலத்தில் தீவ்ஸ் பஜார் என்று பெயராம்.
இதுதான் நண்பர்களே... அந்தக்கால ஷாப்பிங் சென்டரின்
வரலாறு.
(இன்று ஒரு தகவல் மூலம் பெறப்பட்ட தகவல்)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா