K.N.சஜீவ்குமார்
217\37918
நாடு விடுதலை அடைந்து 66 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் வெள்ளையர்கள்
காலத்தில் இருந்த உழைப்புச் சுரண்டல் இன்றளவும் நீடிக்கிறது. ஒரு வித்தியாசம், வெள்ளை
முதலாளிக்குப் பதிலாக உள்ளூர் முதலாளிகள் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார்கள். நம்
நாட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிகளில் கொடூரமாக சுரண்டப்படுகிறார்கள்.
சமீபத்தில் வடகிழக்கு பகுதியில் இருந்து வேலை
தேடி வரும் இந்திய மக்களுக்கு பெங்களூரில் உள்ள சில விஷக்கிருமிகளால் குறுந்தகவல் மூலம்
அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவர்கள் உயிருக்குப் பயந்து கூட்டங்கூட்டமாக ரயிலேறினார்கள்.
அதுபோலவே மகாராஷ்டிராவில் சில அமைப்புகள் பீகாரிகள் மீது திட்டமிட்டு வெறுப்புணர்வைப்
பரப்புகிறார்கள். வடகிழக்கில் இருந்து வரும் மக்கள் அந்த அரசாங்கத்தின் தவறான கொள்கையால்
விவசாயம் நலிந்து, வேறு தொழிலும் இன்றி, சொந்த நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்கிறார்கள்.
ஆனால் சென்ற இடத்தில் முதலாளிகளின் இலாப வெறிக்கு இரையாவதோடு, அந்தப் பகுதி தொழிலாளர்களின்
வெறுப்புக்கும் ஆளாகிறார்கள்.
எனவே, நம் கோபம் வடக்கில் இருந்து வரும் மக்கள்
மீது இல்லாமல் அங்கிருந்து அவர்களை இடம் பெயற வைத்த அரசாங்கத்தின் உலகமயம், தாராளமயம்
ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மாற வேண்டும். நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் வளர வேண்டுமானால்,
சொந்த நாட்டிலேயே இந்தியர்கள் அகதிகள் போல் நடத்தப்படாமல் இருக்க வேண்டும். எல்லா பகுதிகளிலும்
உற்பத்தி வளர்ச்சிக்கான வழிகளைச் செயல்படுத்தி, ஆர்ம்ட் போர்சஸ் ஸ்பெஷல் பவர்ஸ் ஆக்ட்
போன்ற ஜனநாயக விரோதமான சட்டங்களை விளக்கி மக்களை அணிதிரட்ட வேண்டும்.
ஒபாமா கருப்பினத்தவராயினும் ஆப்பிரிக்க நாடுகளை
சுரண்டுவதை அமெரிக்கா இன்றளவும் நிறுத்தவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவம் நிறம், மொழி, மாநிலம் என்று பார்ப்பதில்லை, இலாபத்தை
மட்டுமே பார்க்கிறது. எனவே, இங்கு வேலையின்மைக்கு காரணம், வெளியில் இருந்து வரும் தொழிலாளர்கள்தான்
என்று கூறி பிரச்சனையைத் திசை திருப்பும் சதி வலையில் நாம் சிக்காமல், இதைச் சமாளிக்க
மொழி, மதம், ஜாதி என்ற அடையாளங்களை உதறி வர்க்க ரீதியாக ஒன்றுபட வேண்டும்.
ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை உலகுக்கு
உணர்த்த வேண்டும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா