K.சுப்பிரமணி,
250\L191
செயலாளர்,
நுகர்வோர்பாதுகாப்பு மையம், திருவொற்றியூர்
ஓவ்வொரு தனி மனிதனுக்கும், நிறுவனத்திற்கும்
சமுதாயத்தை மேம்படுத்தும் கடமை உள்ளது. அதிலும் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளான நிலம்,
நீர், காற்று இவற்றை மாசுப்படுத்தி பொருள் உற்பத்தி செய்து அபரிமிதமான லாபம் சம்பாதிக்கும்
நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேம்படுத்தும் கடமை மிக அதிகமாக உண்டு.
ஆனால் நமது பகுதியில் உள்ள நிறுவனங்கள் சமுதாயத்தை மேம்படுத்தும் பொறுப்புணர்ச்சியுடன்
நடந்து கொள்கின்றனவா? என்றால் இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும்.
காரணம் எல்லா
நிறுவனங்களும் சேர்ந்து மக்களுக்கு நீண்ட காலம் பயனளிக்கும் எந்த செயலையும் செய்யவில்லை.
ஜெர்மனியில் உல்ஸ்பெர்க் என்ற பகுதியில் உள்ள ஓக்ஸ்வேகன் என்ற கார் தயாரிக்கும் நிறுவனம்
அப்பகுதியில் கல்வி, மருத்துவம், சாலைகள், பூங்காக்கள், தண்ணீர் போன்ற அனைத்துத் தேவைகளையும்
செய்து வருகிறது. ஆனால் இங்குள்ள நிறுவனங்கள்?
போக்குவரதின் நம்பிக்கை நட்சத்திரமான மெட்ரோ
ரயில் திட்டம் தங்கள் பகுதிக்கும் வேண்டும் என்று வடசென்னை பகுதியில் மக்கள் போராடி
விம்கோ நகர் வரை நீடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இங்குள்ள நிறுவனங்கள் அதற்காக கோரிக்கை கூட எழுப்பாமல் மௌனம் சாதிப்பது பகுதி மக்களுக்கு
நிறுவனங்கள் செய்யும் துரோகம் அல்லவா? ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள அந்நிய நிறுவனங்கள்
கூட தங்கள் பகுதிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போது
வடசென்னை தொழிற்சாலைகள் மௌனம் காப்பது எவ்வளவு பெரிய துரோகம். அதுமட்டுமல்ல வடசென்னையில்
தான் அதிக லாபம் சம்பாதிக்கும் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் இலாபத்தில்
2% கொடுத்தாலே நூறு கோடிக்கு மேல் வரும். இப்பணத்தின் மூலம் அனைத்து நிறுவனங்களும்
ஒன்று சேர்ந்து இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள், நீர்த் தேக்கங்களைச் சுத்தம் செய்து
மழைநீர் தேக்கியும், முடிந்த இடங்களில் எல்லாம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியும்,
பராமரித்தும் வந்தால் நிலத்தடி நீர் உப்பாகவும், இரசாயன கலப்பும் தடுக்கப்பட்டு, இப்பகுதி
மக்களுக்கு தூய்மையான நிலத்தடி நீர் கிடைக்குமல்லாவா? நல்ல கல்வி நிலையத்தைத் தொடங்கி
குறைந்த கட்டணத்தில், தரமான கல்வியைக் கொடுத்தால் இப்பகுதியில் உள்ளவர்களும் 100% படித்து
வாழ்வில் வளம் பெறுவார்கள் அல்லவா? அதே போல் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்
திடல் அமைத்து திறமையானவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்தால் இப்பகுதியிலும் எத்தனையோ
டெண்டுல்கர்களும் தோனிகளும் உருவாகமலா போவார்கள்?
முடிந்த இடங்களில் பூங்காக்கள் அமைத்தும், சுற்றுப்புறச்
சூழல் மேம்பட எல்லா இடங்களிலும் மரங்கள் நட்டு வளர்த்தால் மக்கள் எவ்வளவு ஆரோக்கியமாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்? மேலும் ஒரு தரமான மருத்துவமனை அமைத்து குறைந்த செலவில்
மருத்துவ சேவை அளித்தால் மக்கள் நன்றி உள்ளவர்களாகவும், மனதார வாழ்த்துபவர்களாகவும்
இருப்பார்களே... முன்னேறுவதற்காக ஒன்றிணைவோம் என்று கூறிய திரு.இந்துஜா அவர்களின் வார்த்தைக்கேற்ப,
இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு அசோக் லேலண்ட் நிர்வாகம், இப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களையும்
ஒருங்கிணைத்து செயல்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா