Tuesday, 15 October 2013

எளிய குறிப்புகள்… மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - 2

R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

            உற்பத்தியும் சந்தை முறையும் உருவாவதற்கு முன் இருந்த சமூகம் பண்டமாற்று முறை சமூகமாக இருந்தது. அதற்கு முந்தைய சமூகம் சம பங்கீட்டுமுறை சமூகமாகவே இருந்தது.

            சந்தைமுறை சமூக அமைப்பு உருவாகிய பொழுதுதான், புதிய நாகரீகங்களும், பல அடுக்குமுறை மனித கட்டுமானங்களும் தோன்ற ஆரம்பித்தன. சந்தையை கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு படுத்துவதற்கும் நிர்வாக அமைப்புமுறையும், பின் அதுவே அரசாகவும், ஆட்சிமுறையாகவும் மாறியது.


            ஆள்பவரின் தேவைக்கு, மனநிலைக்கு ஏற்பவும், சமூக முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசர் மற்றும் புதிய கருத்துக்களைச் சொல்பவரை வழிபடும் முறை உருவானது. இது சமூகத்திற்கு சமூகம் மாறுபடுவது இயற்கைச் சூழலும், தேவைகளின் வித்தியாசத்தால் நிகழ்ந்தவை.

            சமூகங்கள் மற்ற சமூகங்களிடம் தொடர்பு ஏற்பட்ட பின், சந்தை முறையில் மாற்றம் ஏற்பட்டு தேசங்கள் உருவாகத் தொடங்கின. தேசங்களாக விரிவடைந்த சந்தையினால் உற்பத்தி முறையில் பெருமாறுதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக அதிகமாக உற்பத்தி செய்யவும், தேசம் முழுவதும் கொண்டு செல்லவும் கருவிகளும், வாகனங்களும் தேவைக்கு ஏற்ப கண்டுபிடிக்கப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சி வேகம் அடைந்தது. தொழிற்புரட்சியின் விளைவாக மன்னராட்சி முறை அகற்றப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

            சந்தையை விரிவுபடுத்த புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தேசங்களைக் கண்டுபிடித்து தங்களோடு இணைத்துக் கொள்ளவும், ஆட்சி நடத்தவும் தொடங்கி உலகம் சந்தையால் இணைக்கப்பட்டது. மேலும் சந்தையை தக்க வைத்துக் கொள்ளவும், விரிவுபடுத்தவும் போட்டிகள் ஏற்பட்டன. சந்தை போட்டியின் விளைவாக தேசங்கள் அடிமைப்படுத்தப்பட்டன. உலகம் தழுவிய சண்டைகள் நிகழ்ந்தன. உலகம் அரசியல் ரீதியாக தேசங்களாக பிரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிரிக்கப்பட்ட தேசங்களின் சந்தையை நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாள பல தந்திரங்கள் கையாளப்பட்டன. இதனால் மனிதனின் விஞ்ஞான சிந்தனைகளும், சமூக விஞ்ஞான சிந்தனைகளும் ஆக்கப்பூர்வ நிலையிலிருந்து விலகிச் சென்றது. மனிதப் பண்புகள் சந்தையின் நிலைமைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. சமூகம் அனைவரும் சமமாகவும், ஒற்றுமையுடனும் வாழும் சூழலில் இருந்த சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளும் நிலைகுலைய ஆரம்பித்தன.

(தொடரும்...)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா