Tuesday, 15 October 2013

தீர்வு எப்போது?

M.ஆதிகேசவன், 264/J066

            மூன்று லட்சம் மக்கள் வசிக்கும் திருவொற்றியூரில் மக்களின் வாழ்வாதார திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் மக்கள் அல்லலுறும் நிலை உள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, பாதாளச் சாக்கடைப் பணி, குடிதண்ணீர் திட்டம், உட்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகள், மெட்ரோ ரயில் திருவொற்றியூர் வரை என அடிப்படையான கனவு திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி : 5 கி.மீ. நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி ஏழு ஆண்டுகள் ஆகியும் 66 1\4 அடி அகல சாலை, இருபக்கமும் மழைநீர் வடிகால்வாய், மையத்தில் தெருவிளக்குகள் பணி முடியாமல் உள்ளது. இடிக்கப்பட்ட கடைகளும், தோண்டிய கால்வாயுமாக, மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் கூட அகற்றப்படாமல் உள்ளது. இதுதான் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் லட்சணம்.

பாதாளச் சாக்கடை திட்டம் : மே 8, 2007-ம் ஆண்டு ரூ.88 கோடி மதிப்பில் துவக்கப்பட்டு, 18 மாதங்களில் முடிய வேண்டிய பணி 76 மாதங்கள் ஆகியும் முடிந்த பாடில்லை.

குடிதண்ணீர் திட்டம்: ஜவகர்லால் நேரு நகர்ப்புற குடிதண்ணீர் திட்டத்தின் மூலம் ரூ.86 கோடி மதிப்பீட்டில் ஏப்ரல் 12, 2010ல் துவங்கப்பட்டது. 6 மேல்நிலைத்தொட்டிகள், 6 கீழ்நிலைத்தொட்டிகள், 173 கி.மீ.குழாய் அமைத்தல், 65,000 வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் திட்டம். இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டியது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிந்த பாடில்லை.

உட்புறச் சாலைகள் : பாதாளச்சாக்கடை, குடிநீர் திட்டங்களை காரணம் காட்டி திருவொற்றியூர் உட்புறச்சாலைகள் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெரியோர்கள், பெண்கள் என அனைவரும் நடந்து செல்லக்கூட இயலாமல் குண்டும் குழியுமான உட்புறச் சாலைகள் காணப்படுகின்றன. மாநகராட்சிதான் மக்களின் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டம் : திருவொற்றியூர் முதல் மீனம்பாக்கம் வரை என அறிவித்த மெட்ரோ ரயில் திட்டம் தங்கசாலையுடன் நின்று போனது. மக்களின் போராட்டங்களால் திருவொற்றியூர் வரை பரிசீலனை என அரசு அறிவித்து மண் பரிசோதனையும் செய்தது. நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணி தொடராமல் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டம் தொடராததற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

            ஒட்டுமொத்தமாக திருவொற்றியூர் மக்களின் பிரச்சனைகள் ஆமை வேகத்தில் அணுகப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பும் இந்த இழிநிலை தொடர்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களின் கோப ஆவேசத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டியது வரும் என எச்சரிக்கிறோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா