Tuesday 15 October 2013

நீ தான் என் மகள்



S.கெஜராஜ், 375/K700 Mechatronics

            பேரக் குழந்தையைப் பார்க்கும் ஆவலுடன் என் சம்பந்தி வீட்டுக் கதவை மெல்ல தட்டினேன். ``யாரது...?'' என்று மறுமுனையில் இருந்து வந்த சத்தத்திலேயே என் பெண்ணுடைய மாமியார் என்பதை உணர்ந்து கொண்டேன். பாதி கதவு திறந்த நிலையில், ``ஓ... நீங்களா!'' என்று ஒரு அலட்சியம் மற்றும் ஆணவப் பார்வை அவர் முகத்தில் தெரிந்தது.

            ``என்ன வேணும் உங்களுக்கு?'', ``என் பெண்ணையும், மாப்பிள்ளை மற்றும் பேரக்குழந்தையைப் பார்க்கலாம்னு வந்தேம்மா'' என்றேன் நான். ``அவங்க எல்லாம் யாருமில்லை, வெளியே போயிருக்காங்க'' என்றாள் முகத்தில் கண்டிப்புடன். ``இன்னிக்கு, ஞாயிற்றுக்கிழமை. அதனால்தான் அவங்களை எல்லாம் பாக்கலாம்னு'' என்று இழுத்தேன். ``ஞாயிற்றுக் கிழமைன்னா வீட்டிலேயே இருப்பாங்களா... ஷாப்பிங், கோயில் அது இதுன்னு போக மாட்டாங்களா...?'' கதவைப் பாதி மூடிய நிலையிலேயே உள்ளே கூட கூப்பிடாமல், ``நீங்க போகலாம்'' என்று கூறியவாரே கதவை டமார் என்று முகத்தில் அறைவது போல சாத்தினாள் என் சம்பந்தி!
            `உள்ளே அழைத்துப் பேசி ஒரு டம்ளர் தண்ணீர் கூட கொடுக்கவில்லையே' என மனம் நொந்தேன் நான். `மரியாதை தெரியாத இவர்களா மனிதர்கள். நம் சொந்தம் வேறு; வெளியே யாரிடம் நான் சொல்வேன்? எனக்கு வேறு யார் இருக்கா?' நினைத்தால் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
            கடுமையான வெயிலின் தாக்கம் வேறு, மெதுவாக நடந்து சாலையோரம் இருந்த டீக்கடையின் பெஞ்சின் மீது அமர்ந்தேன். ``டீ ஒன்னு கொடுப்பா!'' என்றேன் டீ மாஸ்டரிடம்.
            அங்கே இருந்த செய்தித்தாளில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. முதியோர் நல்வாழ்வுக்கான நிகழ்ச்சி பற்றிய அந்தச் செய்தி என்னை நட்சத்திர தொலைக்காட்சி அரங்கத்திற்கு இழுத்தது. நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று அந்த திரைப் பிரபலம் என்னை மேடையில் பேசச் சொல்லி அழைத்தார்.
            ``அம்மா! நான் ஒரு நல்ல நிறுவனத்துல பணிபுரிந்து, பிறகு பணி ஓய்வு பெற்றேன். சொந்தமா வீடும், மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணு என்று இருந்தேன். பசங்கள நல்லா படிக்க வச்சேன். நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். சமீபத்துல என் மனைவி இறந்துட்டா... இப்ப எனக்கு யாரும் இல்ல! எனக்கு வயது 70 ஆவுது. என்னால இப்போ வேலையும் செய்ய முடியல. பையனும் இப்போ என்னிடம் இல்ல. அவன் தனியா போயிட்டான்!'' என்றேன்.
            ``பெண்ணுக்கு என் மேல ஆசைதான், ஆனா அவ கட்டிக்கிட்ட இடத்துல சூழ்நிலை வேறு. அவளும் என்னை வந்து பார்க்கிறதோ, பண உதவி செய்யறதோ இல்லை. அவுங்க எனக்கு எதுவும் கொடுக்காட்டியும் பரவாயில்லை. ஆனா என் பேரப்பிள்ளைகளைக்கூட பார்க்க அனுமதியில்லாம சுடு சொல் சொல்றது தாங்க முடியல! என் மகனும் என்னைக் கைவிட்டுட்டான். என் ஏழ்மை தான் என்னை அவங்க அவமானப்படுத்த காரணமா இருக்கு. என் வீட்டையும், என் இரண்டு பிள்ளைகள் நலனுக்காக வித்துட்டேன். இப்போ நான் தங்குறதுக்குக் கூட இடமில்ல'' என்று சொல்லிவாறே, எனது கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டேன்.
            இதைக் கேட்டுக்கொண்டிருந்த தன்னார்வ முதியோர் காப்பகத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண், அந்த மேடையில் இருந்த இந்தக் கிழவனிடம், ``நான், இவரை என் முதியோர் இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இவரை என் தகப்பனார் ஸ்தானத்தில் தத்தெடுத்துக் கொள்கிறேன்'' என்றாள்.
            ``உண்மையிலேயே நீதாம்மா என் மகள்'' என்று கூறி கண்களில் நீருடன் அவளைக் கைகூப்பி வணங்கினேன். அந்த அரங்கமே விமலாவை ஆராதித்தது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா