Tuesday, 11 March 2014

காசு… பணம்… துட்டு… மணி… Money…

R.ஜெயராமன், மாநிலப் பொருளாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி

      அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தியை, தங்கள் நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப் போதுமான சந்தை இல்லாத நிலை உருவானது. ஆனாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி வந்தது. மூலதனம் இத்தகைய நெருக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதற்குச் சந்தை விரிவாக்கம் தேவைப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய சந்தையும், குறைந்த கூலிக்கு கூடுதல் தொழிலாளர்களும் கிடைத்தனர். விளைவு உலகமயம் என்கிற பெயரில் வளரும் நாடுகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியை போக்கிக் கொள்ள அந்நாடுகளில் முதலாளிகள் திட்டமிட்டு செயல்பட்டனர்.
      இந்தியா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சதிகளை எதிர் கொள்ளத் திட்டமிடவில்லை. இந்திய பெரு முதலாளிகள் உலகமயம் மூலம் நாமும் உலகில் எங்கும் மூலதனம் போட்டு லாபம் எடுக்கலாம் என்று சமரசம் செய்து கொண்டனர். இந்திய ஆளும் வர்க்கமான பெரு முதலாளிகளின் அரசு, பன்னாட்டு மூலதனத்தையும் பாதுகாக்கிறது; இந்தியப் பெரு முதலாளிகளின் தொழிலையும் பாதுகாக்கிறது.
      இதனால் பாதிக்கப்படும் பல கோடி உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி மூலதனம் கொள்ளை லாபம் எடுக்கிறது. மூலதனத்தின் இக்கொடூரச் செயலுக்கு எதிராக உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு போராட முயற்சித்தால், அதை உடைத்திட மூலதனம் பல வழிகளை மேற்கொள்கிறது.

      சமுதாயத்தின் இறந்த கால வரலாறு, வர்க்கப் போராட்டத்தின் வரலாறு. முதலாளிகளின் பொருளாதார பலம் பெருகப் பெருக தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்து, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தங்களைக் காத்துக் கொள்வதுடன், ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுக்க முயல வேண்டும். மாறி வரும் உலகமய சூழலில், தொழிலாளர் வர்க்கம் தன்னைக் காத்துக் கொள்ளவும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா